சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் ஒன்று – திருமாலுக் காழி யளித்தாய் போற்றி

கடவுளுக்கும் கடவுளுக்கும் போட்டியா? இல்லை என் கடவுளுக்கும் உன் கடவுளுக்கும் போட்டியா? பெரும்பாலும் இது மாதிரி சர்ச்சைக்குரிய வாதங்களை தவிர்க்க முயற்சிப்போம்.

ஆனால் சில நேரங்களில் இவை அத்து மீறிப் போகும் பொழுது, நாம் அந்த வாதங்களை சரியான முறையில் பார்ப்பதற்கு முன் முதலில் அங்கே என்ன இருக்கிறது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றில் எது சரி எது தவறு என்ற அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. எனினும் அன்று என்ன இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இருப்பதை ஆராய்ந்து பார்க்கும் முன்னரே போர்க்கொடி தூக்குவது நல்லதன்று. சிற்பம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றை மனிதனின் மனதால் கட்டுப்படுத்தி செதுக்கப்பட்ட பொருள் என்று மட்டும் பார்க்காமல் மனதை கட்டுப்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்தும் செல்லும் கருவி என்றே நாம் பார்க்கவேண்டும்.

இந்த தளத்தின் நோக்கம் சிற்பங்களில் மறைந்து இருக்கும் கதைகளையும் நுணுக்கங்களையும் அனைவரும் விளங்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதே. கடந்து வந்த பாதை கரடு முரடானது. பல மதங்கள் காலப்போக்கில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன, ஒரே மதங்களினுள்ளும் இந்த போட்டி நிலவியது. எனினும் இவையும் நமது பாரம்பரியத்தின் இழையாக பிணைந்து விட்டன. இவற்றில் சரி தவறு என்ற வாதங்களை எடுத்தாண்டு எதிரிகளாக நிற்காமல் இருப்பதை இருந்தாக பாருங்கள் என்பது முதல் வேண்டுகோள். இப்படி பார்க்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தயவு செய்து இப்போதே மேலும் படிக்காமல் விலகி விடுங்கள் என்பது இரண்டாவது வேண்டுகோள்.

என்னடா பில்ட் அப் பெரியதாக இருக்கிறதே என்று பார்க்க வேண்டாம். இது போன்ற சர்ச்சை வடிவங்கள் பல உண்டு. ஏன் பரவலாக காணப்படும் லிங்கோத்பவர், காண்பதற்கரிய சரபேஸ்வரர் என்று ஒரு பக்கம். வாமன அவதாரத்தில் கங்கை உரு பெற்ற கதை சொல்லும் சிற்பங்கள் என்று இன்றைய சினிமா படம் போல ஆடியன்சுக்கு ஏற்ப சிற்பங்களும் செதுக்கப்பட்டன. அரசர்களும் தங்களுக்குப் பிடித்த தெய்வங்களை உயர்த்தியும் போற்றியும் குறிப்பிட்ட மதத்தை வளர்த்தனர். நாம் இன்று இரு சிற்பங்களை பார்க்க போகிறோம். விஷ்ணு அனுக்ரஹா மூர்த்தி / சக்கர தானர், இது மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் சிற்பம், காலத்தால் மாலிக் கபூர் தாக்குதலுக்கு பின்னர் உருவானதாக இருக்கலாம். மற்றொன்று அதையும் விட பழமை வாய்ந்த எட்டாம் நூற்றாண்டு ராஜ ஸிம்ஹ பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பம்.

சிற்பங்களை ஒட்டிய கதை ஏதோ நான் ஓட்டுகின்ற கதை அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை இங்கே எடுத்துக் கொடுத்துள்ளேன்.

ஆறாம் திருமுறை

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.

ஒரு வழியாக சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாகி விட்டது. இப்போது கதைக்குள் செல்வோம். வழக்கம் போல இந்த கருவை கொண்டு பல கதைகள் உள்ளன.

முதல் பாகம்:

ஜலந்தரன் என்னும் சமுத்திரராஜனின் மகன் தன்னுடைய ஆட்சியை எங்கும் நிலைநாட்ட, தேவலோகம், மற்ற தேவர்கள் அனைவரையும் தனக்குக் கீழ் கொண்டு வர எண்ணினான். அவன் மனைவியான பிருந்தை பதிவிரதை என்பதாலும், சிவ பக்தை என்பதாலும் அவளின் சிவ பக்தியும், கற்பின் சக்தியும் அவனைக் கட்டிக் காத்ததால் யாராலும் இந்த ஜலந்தரனை அழிக்கமுடியவில்லை.ஆனாலும் ஈசனோடும் ஜலந்தரன் போர் புரிகிறான். ஈசனுக்கோ, தன் பக்தையின் கணவனை எங்ஙனம் அழிப்பது என்று தன்னுடனும் போருக்கு வரும் ஜாலந்தரனைத் திருப்பி அனுப்புகிறார்.மகாவிஷ்ணுவின் மூலமே அவனை அழிக்கவேண்டும் என எண்ணினார் ஈசன்.

மஹாவிஷ்ணுவும் அதற்கு உடன்பட்டு சிவனுக்கு வழிபாடுகள் செய்கின்றார். ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்து விஷ்ணு வழிபட ஆயிரமாவது தாமரை இல்லாமல் 999 தாமரைகளே இருக்கின்றன. எண்ணிக்கையில் ஒன்று குறைவதைக் கண்ட விஷ்ணு ஆயிரமாவது தாமரைக்காகத் தன் கண்ணைப் ( அவன் தான் கமலக்கண்ணன் ஆயிற்றே!! ) பிடுங்கி அர்ச்சிக்கிறார்…. (இதோ காஞ்சி கைலாசந்தர் கோயில் சிற்பம்.)

பல்லவ சிற்பியின் தனித்துவம் இங்கும் தெரிகிறது. ஈசன் அமர்ந்திர்க்கும் பாணியில்தான் என்ன ஒரு யதார்த்தம். ஒரு காலை மடித்து , வலது கரத்தை ஆசனத்தில் முட்டுக் கொடுத்து அமர்ந்திருக்கும் காட்சி அருமை. தலைக்கு மேலே மற்ற இரு கைகளும் என்ன செய்கின்றன? ஏதோ தலைப்பாகையை கட்டுவது போல உள்ளது, அருகில் உமையம்மை. பெருமாள் ஒரு காலை மடித்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை சிவனுக்கு அளிப்பது போல உள்ளது. இன்னொரு இடது கரம் கண்ணப்பர் போல தனது இடது கண்ணை பறிக்க செல்கிறது.

சிற்பி இங்கே பின்னணியில் உள்ள கதைக்கு ஏற்ப சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஒரு வேளை அதில் நமக்கு எதாவது சொல்ல வருகிறானோ. தான் யார் என்பதை மறந்து அவனுடன் ஒன்றாகும் நிலையே பக்தி அல்லவா?

கதையின் அடுத்த பகுதியையும் மதுரை சிற்பதையும் அடுத்து பார்ப்போம்.

பெருமாளின் செய்கையை பார்த்து, ஈசன் பிரத்யக்ஷமாகி அவரைத் தடுத்துத் தரையில் காலால் கீறி ஒரு வட்டம் வரைகிறார். அதைச் சக்கரமாக வரைந்து அதைப் பெயர்த்தெடுத்து அந்தச் சக்கரத்தின் மூலம் ஜலந்தரனைக் கொல்லச் சொல்கிறார். இதுவே அறுபத்து நாலு சிவ வடிவங்களின் புராணக்கதைகளிலும்,ஈசனின் வீரச் செயல்களைப் பற்றிச் சொல்லும்போதும் வேறுவிதமாய் ஈசனே அந்தச் சக்கரத்தை ஜலந்தரன் மேல் வீசி எறிந்து அவனை இரண்டாகப் பிளந்ததாயும் வரும். பின்னரே அந்தச் சக்கரத்தை விஷ்ணுவுக்குக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள். நமக்கு இப்போது தேவை ஈசன் பெருமாளுக்கு சக்கரம் தருவது மட்டுமே.

இந்த காட்சியை மதுரை சிற்பதில் பாருங்கள்.

விஷ்ணு மற்றும் சிவன், அருகில் நான்முகன். கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டு யார் யார் என்று தெளிவாக புரிகிறது. இந்த காலத்தில் ஆகமங்கள் மேலோங்கி நின்று சிற்பியின் திறனை தாங்கள் இட்ட சட்டங்களுள் கொண்டுவந்து விட்டன. எனவே பல்லவ சிற்பதில் பார்த்த உயிரோட்டம் இங்கே இல்லை. சிற்பம் சிலையாக சொல்லும் கதையை சொல்வதில் மட்டும் தன் கவனத்தை செலுத்துகிறது.

தூண் சிற்பம் தான், எனினும் சிற்பி இன்னும் சற்று சமமான முறையில் அனைவரையும் காண்பித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. கலைக் கண்ணோடு பார்ப்பவருக்கும் சரி சமயக் கண்ணோடு பார்ப்போருக்கும் சரியாக இருந்திருக்கும். ஏன் சொல்கிறேன் என்றால் வெவ்வேறு அளவில் செதுக்கியதால் சக்ராயுதத்தை பெருமாளின் அளவுக்கு ஏற்ப செதுக்க , அது ஈசனின் கையில் சொப்பு போல தெரிகிறது…..இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *