ஒளித்துநின்று அம்பு எய்தல் தருமமோ?

முன்னர் நாம் வாலி வதம் தாராசுரம் சிற்பம் பார்த்தோம். அதில் இராமன் சண்டையிடும் வாலியை நோக்கி குறி பார்க்கும் வரையிலும் பார்த்தோம். இப்போது கதையின் அடுத்த காட்சி – ஆனால் அங்கு இல்லை, கம்போடியா பாண்டிய ஸ்ரெய் சிற்பம்.

அற்புத வடிவம். இரண்டு காட்சிகள் ஒரே சிற்பத்தில். முதல் காட்சி ( வலம் இருந்து இடம் – நீங்கள் சிற்பத்தை பார்க்கும் படி ) இராமன் நாணை எய்து விட்டான் – அவனது வலது கரத்தை பாருங்கள் – நானை விட்ட பின்னர் அப்படியே படம் பிடித்தாற்போல உள்ளது .

வில்லின் கயிர் முடி வரையிலும் செதுக்கி உள்ள சிற்பியின் திறன் அபாரம்.

வாலி சுக்ரீவன் – இருவரின் முகங்கள் – சண்டையின் உக்கிரத்தை வெளி காட்டுகின்றன. அவர்கள் கால்களை கொஞ்சம் பாருங்கள் – வினோதமான வடிவமைப்பு – குரங்கின் கால்கள் – கை ( வாலியின் கை) முட்டி – மனித கை போல – சுக்ரீவனை அடிக்க உயர்ந்து உள்ளது.

அடுத்த காட்சி – வாலி தரையில் விழுந்து – தாரையின் மடியில் கிடக்கிறான். அவனது முகத்தை கொஞ்சம் பாருங்கள் – கோபக் கணைகள் – மார்பில் ராமனின் கணை – கம்பனின் வர்ணனையை இப்போது பார்ப்போம்.

இராமன் மறைந்து நின்று எய்திய அம்பினை வாலி மார்பில் வாங்கிக் கொண்டே இராமனைப் பார்த்து நியாயம் கேட்க்கிறான். (கம்பராமாயணம்)

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்மேல் கருணைதூண்டி ஒருவர் மேல் ஒளித்துநின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்”

உரை: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும்போது அவ்விரண்டு பேரையும் ஒரு சமமாக – நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ! இது தக்கதன்று என்று கருதப்படும் பட்சதாபமே ஆகும்.

மேலும் வாலி சொல்லுவான்:

” வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ”

உரை:இராமா! நீ செய்த இச்செயல் வீரமுடையதன்று; நூல்களில் விதித்த முறையன்று; உண்மையை சார்ந்ததும் அன்று; உனக்கு உரியதான இவ்வுலகத்துக்கு என் உடல் ஒரு சுமையும் ஆகாது; நான் உனக்கு பகையும் அல்லேன்; இங்ஙனம் இருக்கவும், நீ உன் பெருமைக் குணம் அழிந்து அன்பின்றி இச்செயலைச் செய்த விதம் எக்காரணத்தாலோ?

நியாயம் கேட்ட வாலியைப் பார்த்து இராமன் தான் ஏன் அவ்வாறு வாலியின் மீது அம்பெய்தினேன் என்பதையும், அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்த சுக்கிரீவனுக்கு சந்தேகத்தால் வாலி இழைத்த அநீதியையும், அவன் மனைவி தாரையை அபகரித்ததுவும் வாலிக்குத் தகாது என்பதனையும் எடுத்துச் சொல்வான்.

“ஈரம் ஆவதும் இற் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றும் ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கும் அரோ”

உரை: அன்புச் செயலாவதும், உயர்குடியில் பிறந்த தன் பயன் ஆவதும், வீரத்தின் பயன் ஆவதும், மற்றொருவனுக்குச் சேர்ந்த மனைவியைக் கற்புத் தவறாதபடி பாதுகாக்கும் பெருமையே அன்றோ”


“ஆதலானும் அவன் எனக்கு ஆருயிக்
காதலான் எனலானும் நிற் கட்டெனென் “

நீ இப்படியெல்லாம் செய்தாய் ஆதலாலும், இந்த சுக்கிரீவன் என் உயிர் போன்ற நண்பன் என்பதாலும் உன்னைக் கொன்றேன். என்று சொல்வான் இராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *