சுந்தரர் திருவையாற்றில் காவிரியை பிரிய செய்யும் காட்சி

இன்று மீண்டும் தராசுரம் – பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம் பார்க்க சதீஷ் அவர்களின் படங்கள்.

இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்ற அறியாமல் பல நாட்கள் தேடினேன்.

ஒரு கோயிலின் முன் இருவர் – ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் – மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல – மறு கரம் உயர்த்தி – எதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.

பிறகு திரு நா . கணேசன் அவர்கள் ஒரு அருமையான ஆய்வுக்கட்டுரையை தந்தார் – சான் இரால்சுடன் மார் அவர்களது ( Marr, JR, “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ ). அப்போது தான் விளங்கியது. என்ன ஒரு அற்புத நிகழ்வு , அதை பற்றி பெரியபுராண குறிப்புகளை தேடும்போது, திரு சதீஷ், திரு திவாகர் , திரு சுப்ரமணியம் அவர்கள் உதவியுடன் இவை கிடைத்தன .

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது , திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற , சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு…


130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4

131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4

132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4

133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4

134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4

135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4

136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4

137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4

138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்

நன்றி மதுரை திட்டம்

சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் ( நம் பார்வையில் ) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி – வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள் – காவிரியை நோக்கி ( வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ ?) – இதே போன்று சிறு வயதில் பிரபல ஹாலிவுட் திரைப்படம் – ஈஸ்ட் மேன் கலரில், சிசில் டி மில்லி இயக்கம், சார்ல்டன் ஹெஸ்டன் , யுள் பிரின்னர் – பிரம்மாண்ட படைப்பு இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது – யூதர்கள் செங்கடலை கடக்கும் காட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *