புத்திர சோகம் – ஒரு சாபம்

இன்று நாம் ஹம்பி ஹசரா ராமர் கோயில் சிற்பம் ஒன்றை பார்க்க போகிறோம். ராமாயணத்தின் தொடக்கம் – தசரதனின் இளமை பருவம் . அப்போது ஒரு விபத்து, ஒரு இழப்பு ஒரு சாபம்.

சரி – கதையை பார்ப்போம் . ( நன்றி கீதா அம்மா ) மன்னனும் பெரும் வீரனும் ஆன தசரதன் பல நற்குணங்கள் பெற்றிருந்தும் அவன் ஆசை, பாசம், காதல், கோபம், காமம், அதனால் விளையும் துக்கம் போன்றவை நிரம்பியவனாகவே காணப்படுகின்றான். தன் மூத்த மகனை அவன் பிரிய மறுத்ததுக்கும், விசுவாமித்திரருடன் அனுப்ப மறுத்ததுக்கும் காரணம் உண்டு. தசரதன் இளைஞனாய் இருந்த காலத்தில் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம் மாலை நேரமாகி இருட்டியும் விடுகின்றது. அப்போது இருட்டில் ஒரு நீர்த்துறைக்கு அருகே யானையோ அல்லது ஏதோ காட்டு மிருகமோ நீர் குடிக்கின்றது என நினைத்துக் குறி தவறாமல் அம்பெய்யும் தன் திறமையால் அம்பெய்ய, அம்பு பட்டதோ ஒரு மனிதன் மீது.

இதோ சிற்பம்

நண்பர் மஞ்சு அவர்களது படம்

பதறிப்போன தசரதன் அங்கே போய்ப் பார்க்க அம்பினால் வீழ்ந்து கிடப்பதோ ஒரு முனிகுமாரன். “ஸ்ரவணகுமாரன்” என்னும் பெயர் உள்ள அந்தப் பையன், கண் தெரியாத, வயதான தன் பெற்றோர்களைக் காப்பாற்றி வந்தான். தனது முதுகில் சுமந்தவாறு அவர்களை எடுத்து வரும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கிறது.

அவர்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர்த் துறைக்கு அவ்வேளையில் நீர் எடுக்க வந்ததாயும், தசரதனின் அம்பால் வீழ்ந்து விட்டதையும் தெரிவித்துத் தன் பெற்றோர் தாகத்துடன் இருப்பார்கள் எனவும் போய் அவர்களின் தாகத்தைத் தீர்த்து விடு எனவும் சொல்லிவிட்டு இறக்கின்றான்.

அவன் பெற்றோர்களை மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் சென்று சந்திக்கும் தசரதனைத் தன் மகன் இல்லை எனவும், தன் மகனைக் கொன்றவன் அவனே எனவும் அறிந்து கொள்ளும் அந்தத் தம்பதிகள் புத்திர சோகம் தாளாமல் தசரதனும் அவ்வாறே புத்ர சோகத்தால் இறக்கவேண்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு இறந்து விடுகின்றனர்.

இது தான் விதி, என்றும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும் புரிய வைக்கின்றது. ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று, அதனதன் காலத்தில் சற்றும் வழுவாமல் அப்படியே நடக்கின்றது. அதற்குச் சாட்சி …

சரி , கம்பன் இதை எப்படி வர்ணிக்கிறான்

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/ayodhya_kandam/04.htm

தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்

‘பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72

‘வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73

‘ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியொன்று இலவாய் நயனம்
திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74

‘புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது’ என்ன வெருவா,
‘மக்கள்-குரல்’ என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75

கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
“ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயரப்
பொய்யொன்று அறியா மைந்தன், “கேள் நீ” என்னப் புகல்வான். 76

‘”இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!” என்றே. 77

‘”உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான்’ எனவும், அவர்பால் விளம்பு” என்று,
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78

‘மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவு ஆய்
வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா” எனவே. 79

‘”ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80

‘”வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81

‘”அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82

‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” 83

‘என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, “யானே
இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்று இடலும்,
“வண் திண் சீலையாய்! கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான். 84

‘”கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரியப்
பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்” என்னா. 85

‘”தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது, நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
போவாய், அகல்வான்” என்னா, பொன் நாட்டிடைப் போயினரால்
. 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *