மானை மயக்கிய மோகினிகள்

இன்றைக்கு மீண்டும் ஹம்பி – ஹஸார ராம கோயில் சிற்பம். மிகவும் சுவாரசியமான சிற்பம் – படம் உபயம் கேத்தி , கதை – கீதா அம்மா. முதன்முதலில் இன்றைய இடுகையின் நாயகனை பற்றி நான் கேள்வி பட்டது நண்பர் தலத்தில் – அழகர் கோயில் ஓவியங்களில், தசரதன் தனது பிள்ளை பெரும் யாகத்திற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டவர்.
திரு பாஸ்கர் அவர்களது தளம்

மான் தலை கொண்ட முனிவர் – உடனே என் ஆர்வத்தை தூண்டினார். தேடி பார்த்தேன் – அவர் ரிஷ்யசிருங்கர் ( வால்மிகி படி ) அல்லது கலைக்கோட்டு முனிவர் ( கம்பர் ). அவரைப் பற்றித் தேடும்போது ‘தி ஹிந்து’ நாளேட்டில் ஒரு படம் கிடைத்தது.
தி ஹிந்து

ஒரு பாதிதான் படம் இருந்தது, சமீபத்தில் ஹம்பி சென்ற கேத்தியிடம் கேட்டு பார்த்தேன். அவர் முழு சிற்பத்தை படம் எடுத்து உள்ளேன் என்று உடனே அனுப்பி வைத்தார். முழு படத்தை பார்த்தும் ‘தி ஹிந்து’வில் வந்தது போல இந்த காட்சி தசரதனின் மூன்று மனைவியருக்கு பாயசம் கொடுக்கும் காட்சியா இது என்ற ஐயம் வந்தது. அப்போது கீதா அம்மா அவர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் முழுக் கதையையும் எழுதினார்கள். அப்போது தான் விளங்கியது – இந்த சிற்பம் தசரத யாகத்திற்கு முன்னர் நடைபெற்ற கதை என்று. அதுவும் மிகவும் சுவாரசியமான கதை. கேட்கிறீர்களா ?

காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். விபாண்டகருக்கு ஒரு பெண்மானின் வயிற்றில் பிறந்தார் எனச் சொல்லுவதுண்டு. இவருக்கும் மானைப் போன்ற கொம்புகள் உண்டு. இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். பெண்களையே கண்களால் கண்டிராத அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த அங்க தேச மன்னன் “ரோமபாதன்” தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். பெண்களின் பணிவிடைகளையும், அவர்களின் தோற்றம், ஆடல், பாடல் ஆகியவற்றில் தன்னிலை இழந்து மயங்கிய ரிஷ்ய சிருங்கரை அந்தப் பெண்கள் அங்க நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான “சாந்தை”யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக “புத்திர காமேஷ்டி யாகம்” செய்ய அயோத்தி செல்கிறார்.

இப்போது மீண்டும் சிற்பத்தை பாருங்கள். விளங்குகிறதா ?

அருமையான சிற்பம். கதையைப் படித்த பிறகு – நாட்டியத்தை அவர் ரசிக்கும் பாவமும், நாற்காலியில் கால் மீது கால் இட்டு தன்னை உபசரிக்கும் பெண்களைப் பார்க்கும் முறையும் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *