இராவணனை வென்ற ஜடாயு

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை – தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் – எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) – இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே – கருடனின் அண்ணன் அருணன் – சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் – முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி – யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல – கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த – கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா – இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் – திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *