சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன்

என்னடா இது ? தலைப்பே ஒரு தினுசாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி போன்று, இன்று நாம் பார்க்கும் சிற்பம் ஒரு நையாண்டி அல்ல.

முதலில் இந்த வரிகள் எங்கே வருகின்றன என்பதை பார்ப்போம். சினிமா படம் போல அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு ஒரு பிளாஷ் பாக் …

புது வெள்ளம் – அத்தியாயம் 30
சித்திர மண்டபம்

கண்டராதித்த தேவர் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

“சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”

விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

இப்போது புரிந்ததா தலைப்பு – சரி அது என்ன கோழி கதை. அதை விளக்க திரு N.S. நாராயணசாமி (www.shivatemples.com) அவர்களின் படங்கள் – பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)

அதை பார்க்கும் முன் கதை :

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. ஒரு தெரு கோழியின் வீரத்தையும் அந்த தளத்தின் அற்புத ஆண்மீக சக்தியையும் கண்டு சோழ அரசன் அந்த ஊரையே தன் தலைநகராக நிறுவினான்.

இப்போது சிற்பம்

அருமையான சிற்பம் – யானையை வீரத்துடன் தாக்கும் கோழி ( யானை மதம் பிடித்து என்று உணர்த்த அதன் வால் சற்றே முறுக்கி இருப்பதை பாருங்கள். பட்டத்து யானை – அதன் மேல் இருக்கும் அலங்காரம் மற்றும் மணி – யானை கோழியின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுவதை தத்ரூபமாய் காட்டும் சிற்பம்.

சரி, இந்த கதையின் தொன்மையை பற்றி தெரிய – கொஞ்சம் படியுங்கள்

தவச் செல்வியாகிய கவுந்திய்டடிகளும் கோவலனும் கண்ணகியும் ‘முறம் போன்ற செவியினையுடைய யானையுடன் அஞ்சாது போரிட்ட கோழி என்னும் பெயருடைய ‘உறையூர்’ நகரின் கண்ணே சென்று தங்கினார்கள்.

சிலப்பதிகாரம் வரிகள் – கோவலனும் கண்ணகியும் மதுரை செல்லும் வழியில் கவுந்தியுடன் உறையூரில் தங்கிய செய்தி. அப்போதே ( சுமார் இரண்டாம் நூற்றாண்டு ) இந்த கோழியின் வீரக் கதை பெருமை பெற்றுள்ளது என்றால் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *