இன்று திரு சதிஷ் அவர்களின் படங்கள் கொண்டு தாராசுரம் அற்புத வாலி வதம் சிற்பம் ஒன்றை பார்க்கிறோம்.
வாலி மாயாவி என்ற ஒரு அசுரனுடன் போர் செய்ய ஒரு குகையினுள் செல்கிறான். தனது தம்பியை வெளியில் காவலுக்கு இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். வெகு காலம் அவன் வெளியில் வரவில்லை, உள்ளே இருந்து குருதி கசிவதையும், வாலி போல ஒரு குரல் ( உயிர் நீங்கும்போது வரும் குரல் போல ) கேட்டு பதறிய சுக்ரீவன், ஒரு பெரிய பாறையை உருட்டி குகையின் வாயிலை மூடிவிட்டு திரும்பினான்.
வாலி உண்மையில் அசுரனை வீழ்த்தி வெளிவரும் பொழுது, அடைக்கப்பட்டுள்ள வாயிலை கண்டு தன் தம்பி மீது மீது சந்தேகித்து – சினத்தில் அறிவை இழக்கிறான். மேலும் கிஷ்கிந்தையில் அரியணையில் சுக்ரீவனை கண்டதும் வெறி தலைக்கு ஏற – அவனை உதைத்து நாடு கடத்துகிறான்.
காட்டில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவன் – சீதையை தேடி வருகின்ற ராமனிடம் முறையிட்டு – தன்னை மீண்டும் வானர அரசனாக்கினால், தனது வானர சேனை கொண்டு சீதையை தேடவும் , ராவணனை அழிக்கவும் உதவ முன்வருகிறான்.
வாலி – தான் பெற்ற வரத்தினால் – முன்னின்று போர் செய்யும் எதிரியின் பாதி பலம் தன்னுள் சேர்வதால், ராமன் அவனை பின்னால் இருந்து அம்பை எய்து வீழ்த்தும் காட்சியே இது.
இதை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் .
http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/kitkantha_kandam/07.htm
வாலி வதம் – கிட்கிந்தா காண்டம் – கம்ப ராமாயணம் – உரை டாக்டர் பூவண்ணன்.
சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்
‘எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி’ என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65
வாலி ‘இவனை எடுத்துத் தரை மீது மோதுவேன் என்று நினைத்துத் தன் தம்பியான சுக்கிரீவனின் இடையிலும் கழுத்திலும் இரண்டு கைகளையும் செலுத்தி மேல் எடுத்தான். அப்போது அவன் மீது இராமன் ஓர் அம்பைத் தன் வில்லில் தொடுத்து அந்த வில்லின் நாணுடன் தன் தோள் பொருத்திச் செலுத்தினன்.
கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது – நின்றது என், செப்ப?-
நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66
இராமனின் அந்த அம்பானது, நீரைத் தோற்றுவித்த நெருப்பும், அந்த நெருப்பைத் தோற்றுவித்த வலிய காற்றும் இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பூமியும் இந்த நான்கும் கொண்ட வன்மையைப் பெற்றுள்ள வாலியின் மார்பைப் பழுத்த மிக்க சுவையுடைய வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல எளிமையாகத் தைத்துச் சென்றது என்றால், அந்த அம்பின் ஆற்றலைக் குறித்துக் கூறவேண்டியது என்ன இருக்கின்றது?
சரி இப்போது சிற்பம். மிகவும் சிறிய சிற்பம் . மக்கள் பார்வையில் படுவதில்லை. சரி நாம், அதை எடுத்து காட்டுவோம்.
இப்போது தெரிகிறதா ?
இல்லையா ? இப்போது
அதன் அளவை காட்ட இந்த படம்
படங்களுக்கு நன்றி : சதீஷ் மற்றும் ( கடைசி படம் )http://www.kumbakonam.info