ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *