உயிர் சிலை என்றால் என்ன ?

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் – இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.


இந்த கோணத்தில் பாருங்கள் – இப்போது புரிகிறதா ?

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா – விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது


அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.


அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” – அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *