பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – இரண்டாம் பாகம்

சென்ற பதிவில், சோமஸ்கந்தர் வடிவத்தின் மிக தொன்மையான உருவத்தையும் தற்காலச் சிலையையும் பார்த்தோம்.

தர்மராஜா ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை மிகவும் தொன்மைவாய்ந்தது என்று சொல்கிறார்களே அது எப்படி! அதனை மீண்டும் ஒரு முறை பார்த்துஆராய்வோம். படங்களும், வினாக்களும் என்னுடையது, விடையை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

இதை பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏதும் பிடிபடுகிறதா என்று பார்ப்போம். நாம் கொடுத்து வைத்தவர்கள், சிற்பக் கலைக்கு மெருகேற்றியஅவனது காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. (மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள், நாம் இன்று பார்க்கும் சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது. ஷத்ரியசிம்மேஷ்வரம் சோமஸ்கந்தர் வடிவத்தை அடுத்து வரும் பதிவுகளில் அலசுவோம்).

இரண்டு சிற்பங்களுக்கும் உள்ள வேற்றுமையை எளிதில் கண்டறிய ஒற்றி எடுத்த கோட்டோவியங்கள் உதவும். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமைகளை நீங்களே ஒரு பட்டியல் இடுங்கள் பார்ப்போம்.

மல்லையின் புதிர்களில் இன்னும் ஒரு புதிர். மல்லை ராமானுஜ மண்டபம், அங்கிருக்கும் குடைவரைகளிலேயே மிகவும் முழுமை பெற்ற குடைவரை. எனினும் வன் செயல்களால் இங்கு உள்ள அனைத்து சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. .இரு வாயிற் காப்போன்கள் முதல் உள்ளே இருக்கும் மூன்று புடைப்பு சிற்பங்களும் உளி கொண்டு முழுவதுமாக செதுக்கி எடுக்கப்பட்டுள்ளன. ( யாரால், எதற்கு ?)

ஆனால், எந்தக் கயவனும் தடயம் விடாமல் செல்ல மாட்டானே. கருவறையில் உள்ள பின் சுவரில் அழிக்கபட்ட சிற்பத்தின் தடயங்கள் இன்னும் தெரிகின்றன – ஆம் அதுவும் ஒரு சோமஸ்கந்தர் வடிவமே.

நன்றாக உற்றுப் பாருங்கள், சரி இதையும் ஒற்றி எடுத்து பார்ப்போம். சோமஸ்கந்தர் எந்த வகை? தர்மராஜா ரதம் பாணியா அல்லது ராஜசிம்மேஷ்வர பாணியா? நீங்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

உங்கள் பணியை எளிதாக்க , தர்மராஜ ரதத்தில் உள்ள சோமஸ்கந்தர் வடிவத்தை இரண்டாய் பிரித்து உமை ஒரு பாகமாகவும் ஈசனை மற்றொரு பாகமுமாகத் தருகிறேன்.

இன்னும் உதவி தேவையா. படங்களை நான்றாக தலையை சாய்த்து பாருங்கள் !!

படங்களுக்கு நன்றி:

Varalaaru.com. மற்றும் திரு அசோக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *