பல காலம் என் தாயகத்தில் வெட்டியாக கழித்த பின்னர், என் தாய்மொழின் அருமையை அறியாமல் இருந்த பொது ( கலை தாகம் அப்போதும் கொஞ்சம் இருந்தது ), திரு திவாகர் அவர்கள் என்னை மின்தமிழ் என்னும் ஒரு அரிய குழுமத்திற்கு அழைத்தார். அங்கே நான் என் தாய் மொழியை மீண்டும் கற்றேன், சிறுக சிறுக நடை பயிலும் குழந்தை போல முதலில் ஒரு சில வரிகள் மட்டும் சிற்பங்களை விளக்க இட்டு, பலரின் ஊக்குவிப்பால் பின்னர் சிற்பம், பக்தி இலக்கியம் என்று பலவிதமான துறைகளின் ஒற்றுமையை பற்றி எழுதினேன். அப்போது திரு கண்ணன் அவர்களை சந்தித்தேன், தமிழ் இணைய தளங்களில் மிகவும் பிரபலமானவர், எனினும் நான் எழுதும் சிறிய மடல்களை ரசித்தார், திருத்தினார், பல அரிய பாடல்களை தந்து உதவினார். நண்பர் அசோக் அவர்கள் திருக்குறுங்குடி சிற்பங்களின் படங்களை எனக்கு அனுப்பியவுடன், இந்த அருமையான சிற்பங்களை பற்றி எழுத திரு கண்ணன் அவர்களே சரி என பட்டது. கேட்டவுடன் ஒரே நாளில் இந்த அருமையான மடலை தந்தார் திரு கண்ணன்.
கல்லிலே சிலையை எல்லோரும் காண்கிறோம். ஆயினும் அதைக் கல்லிலே “கலை” என்று சிலராலேயே சொல்ல முடிகிறது. கலை என்பது மனோபாவம். ஒரு பட்டுப்பூச்சி மலரின் மீது நின்றது. அதைப்படமெடுத்தேன். அதன் அழகைக் கண்டவுடன் கவிதையாக ஒரு தலைப்புத் தோன்றியது, “பட்டாம்பூச்சி,பூவின் ஹைக்கூ” என்று. அதை வெறும் புகைப்படம் என்றும் சொல்லலாம், அல்லது அதன் அழகைக் கண்டு அது “கவிதை” என்றும் சொல்லலாம். எனவே கல்லிலே கலை வண்ணம் என்று காண்பது ஒரு மனோபாவம். கவிதா மனோபாவம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் புண்ணியவான்கள். இப்பதிவு காண்போர் புண்ணியவான்கள். இன்னொரு காரணத்திற்காகவும்!.
உளனாக வேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்,
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே?
என்று பேசுகிறது திருவாய்மொழி! இங்கும் மனோநிலை பற்றிய பேச்சுத்தான். உலகில் தற்பெருமை பேசாதோர் உண்டோ? சிலர் அடக்கம் காரணமாக அதிகம் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளாதிருந்தாலும் “தான்” உளன் எனும் அகந்தை என்றும் உண்டு. இறைவன் மனிதனைக் கேட்டானாம், “பிள்ளாய்! நீ என்னைச் சேர்ந்தவன்!” என்று. அதற்கு மனிதன் சொன்னானாம் “யார் சொன்னது? நான் “என்னைச்” சேர்ந்தவன்” என்று. அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த இழுபறி. நாம் நம்மைச் சேர்ந்தோரா? இல்லை பரம்பொருளைச் சேர்ந்தோரா? கோடானகோடி ஜென்மங்களின் நினைவாக நம்மை ஒரு “ஆளாக” கருதிவருகிறோம். அப்படியொன்று இல்லவே இல்லை என்கிறார் நம்மாழ்வார். இருப்பதெல்லாம் அவனே! என்கிறார்.
உண்மை என்பதும், மெய்ம்மை என்பதும் வேறெங்கும் இல்லை, “திருக்குறுங்குடியில்” குடிகொண்டு இருக்கிறது என்கிறார். அந்த மெய்மையைக் காணவாவது நாம் திருக்குறுங்குடி செல்ல வேண்டாமா?
நாரணனின் அவதாரங்கள் பத்து என்பது பிரபலம். ஆனால் உண்மையில் அவை எண்ணற்றவை. இருப்பினும், ஆழ்வார்களின் மனத்தைக்கவர்ந்த அவதாரங்கள் என்று சில உள. அதில் வாமனனாய், குறளுருவாய் வந்து பின் திருவிக்கிரமனாகி ஏழுலகும் அளந்த கதை திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது!
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே
166016571666
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “திருநெடுந்தாண்டகம்” எனும் கிரந்தத்தில் மூவுலகும் கடந்து, அதற்கு அப்பாலும் நிற்கும் முதல்வா! என்று நாரணனைப் போற்றுகின்றார். கஜேந்திர மோட்சத்தில் யானை “ஆதிமூலமே” என்று கூவுகிறது. கடவுள் வருவதற்கு முன் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், கிங்கரர்களும், மும்மூர்த்திகளும் வந்து விடுகின்றனர். ஏன்?
எல்லோருக்கும் தான் ஆதிமுதல் அல்ல என்பது தெரியும். எனவே, யார் அந்த “ஆதிமூலம்”? முதல் வித்து? என்று அறிய ஆவல். அப்போது தோன்றுகிறான் எம்பெருமான் கருட வாகனனாக! தனது வில்லும், வாளும், தண்டும், சக்கரமும், சங்கும் தரிக்க! இதை நம்மாழ்வாரும் கண்டு ரசிக்கிறார். இந்த அழகை சிற்பியும் கண்டு ஆனந்திக்க மிக, மிக அழகான சிலைகளை வடித்துத்
தந்துவிடுகிறான். இச்சிலைகளைக் காணும்போது கஜேந்திரனின் மனோநிலை நமக்கு வரவேண்டும். பணிவுடன் வணங்கும் பக்குவம் வரவேண்டும். தான் எனும் ஆணவம் நிற்கும் போது இரணியனுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் நிகழும். அப்படிப்பட்ட மானிடரை சிறு கவிதை கொண்டு கூட பாட மாட்டேன் என்று கோபமுடன் சொல்கிறார் நம்மாழ்வார்.
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னைய ரும்முனிதிர், குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான்கண்டபின், வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும்சங்கமும், நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
அந்த ஆதீமூலத்தைக் கண்ணாறக்கண்டபின் அது நம் நெஞ்சை விட்டுக்கூட நீங்குமோ? நீங்கக்கூடாது என்பதில் நம் சிற்பியும் கவனமாக இருக்கிறார். தெய்வீக அழகை தெய்வீக சிற்பமாக வடித்துவிட்டால்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாயினும் கண்டு, ரசித்து, உள்ளத்தில் கொள்ள முடியுமே!
திருக்குறுங்குடி நம்பி திருவிக்கிரமன் மட்டுமா? அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள பரமூர்த்தி மட்டுமா? நம்மைப் போன்ற ஏழை எளியோருக்கு அது எட்டுமா? எட்டும் என்கிறான் சிற்பி. அந்த பரவாசுதேவனே பூவுலகில் கண்ணனாய்
1647165116691672
வந்துள்ளான். வெண்ணெய் திருடும் குள்ளனாய், கோபாலனாய், நவநீத சோரனாக!!
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே
இக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார் பெரியாழ்வார். இதைக் கண்டவர் மகிழ்கின்றனர். கற்றவர் இதன் தத்துவம் அறிந்து தெளிவுறுகின்றனர். அத்தெய்வம் திருகுறுங்குடியாய் நிற்பதாகச் சொல்கிறது பெரியாழ்வார் திருமொழி.
165416751663
அப்படியெனில்? இங்கு நீங்கள் காண்பது சிற்பமல்ல. தெய்வம். கண்ணுறும் இக்காட்சியே தெய்வ தரிசனம்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தெய்வ தரிசனம் இவ்வளவு எளிதா? எளிதுதான். விண்ணிருந்து மண்ணிற்கு வரும் நீர்மையே அதற்கு அத்தாட்சி. அவன் இப்படிச் சிலையாய் நிற்பதும் ஓர் அத்தாட்சி! வாழ்க.