ஹனுமான் முதலையின் வயிற்றில் இருந்து வெளி வந்ததை முன்னர் பார்த்தோம். இப்பொது அதேபோல இன்னொன்று.
தாராசுரம் கோவில் சிற்பம் – பெரியபுராண கதைகளில் ஒன்று – அவினாஷியில் சுந்தரர் முதலையால் விழுங்க பட்ட சிறுவனை உயிர் பித்த கதை,
1640
சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை அவினாசி சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் – சிற்பத்தில்.
7.92.4
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.
முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.
சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.
நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.
அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
16371642
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=213
Thanks to Mr. V. Subramanian, for his valuable guidance with regard to the verse references.
http://www.geocities.com/nayanmars