இதுவரை நாம் பெரும்பாலும் கற்சிலைகளையே பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இன்று வெண்கல சிலை, அதுவும் உலகெங்கும் புகழ் பெரும் சோழ வெண்கல சிலையை பார்ப்போம். சோழ வெண்கல சிலை – உலோக கலைக்கு ஒரு முகவரி.
தொலை காட்சி பேட்டியில் ஒரு விளம்பரம் கண்டு சிங்கப்பூர் அருங்காட்சியகம் சென்ற ஜூன் மாதம் சென்றோம். வெளியில் விளம்பர பலகையில் பதினோராம் நூற்றாண்டு சோழ சிலை – உமா பரமேஸ்வரி சிலை ( என் மகன் பிருத்வி அதனுடன் ) ஆர்வத்தை தூண்டியது.
வெளி அறைகளில் பல சோழ வெண்கல சிலைகள் இருந்தன. அழகிய ஆடும் சம்பந்தர் சிலை, சோழர் கால கற்சிலை – சுப்ரமணியர்.
வெளியில் உமையை கண்டவுடனே அந்த சிலை என்னை ஈர்த்து – ஓட்டமும் நடையுமாய் முக்கிய அறைக்கு விரைந்தோம். சிறப்பு காட்சி. உமை
தொலைவில் இருந்து பார்த்தவுடன் காந்தம் போல என்னை அதனிடம் ஈர்த்தது – கடைசி பத்து அடி எப்படி சென்றேன் என்று நினைவில்லை, ஆனால் அருகில் எப்படியோ வந்து விட்டேன். பல வெண்கல மற்றும் பஞ்ச லோக சிலைகள் இதுவரை கண்டதுண்டு, நம் கோயில்களில் இருக்கும் உற்சவர் சிலைகள் நன்கு துடைத்து பளிச்சென இருக்கும்.
ஆனால் இதுவோ, ஆயிரம் ஆண்டுகள் கண்ட சிலை, எங்கும் ஒரு பச்சை நிற போர்வை அணிவித்தாற்போல மயக்கும் சிலை. ஒவ்வொரு சிலையும் ஒரு புது படைப்பு – ஏனெனில், இவை லாஸ்ட் வாக்ஸ் முறையில் வார்த்த சிலை.
வண்டு மெழுகு கொண்டு முதலில் சிற்பி சிலையை வடித்து, அதன் மேல் வண்டல் மண் ( களிமண்) கொண்டு மொழுகி, பின்னர் சுளையில் வைத்து சுட்டு, அப்போது மெழுகு உருகிவிடும், அதனால் ஏற்படும் கூடினுள் உருக்கிய வெண்கலத்தை ஊற்றி, பின்னர் நன்கு ஆறிய பின்னர், கூடை உடைத்தால் உன்னத சிலை பிறக்கும். ஆனால் அது பிறந்த கருவறை அழியும், எனவே ஒவ்வொரு சிலையும் புதிதாக செய்யவேண்டும். (unique)
இரண்டு அடி உயரம் தான், ஆனால் அதில் என்ன ஒரு அழகு, நுணுக்கமான வேலைப்பாடு , முகத்தில் என்ன ஒரு பக்தி பரவசம் மிகுந்த அமைதி,கயல் போல விழியை இன்னும் அழகு பெற வானவில் போல வளைந்த புருவம் , அந்த புன்னகையில் தான் என்ன ஒரு அன்பு,கன கச்சிதமான நாசி , கூந்தல் வளைந்து நெளிந்து தோள்களின் மீது படர்ந்து, அநத கச்சிதமான கழுத்தினை அழகே எடுத்துக்காட்டும் அணிகலன், அவள் நிற்கும் நளினம், கொடி இடையின் வளைவு, அதில் விளையாடும் அவள் பட்டாடை, அநத கைகளின் பாவம் , விரல்களின் உயிரோட்டம் – கலை அழகு தேய்வீகத்துடன் இணையும் உன்னதம்.
கடின உழைப்பின் விளைவு, மரகத வண்ணம் பூசி நம்மை ஆயிரம் ஆண்டுகள் ஒரு நொடியில் பயணித்த சிலை, பத்து நிமிடம் பேச்சு வரவில்லை.
அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை ஆனேன் – அவள் உயிர் பெற்றாள்.
இதுதான் சோழ சிலையின் சக்தி.
http://www.acm.org.sg/exhibitions/eventdetail.asp?eventID=184