ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *