இணையத்தின் வளர்ச்சி , கூகிள் , விக்கி போன்ற வசதிகள் நம் படைப்புகளுக்கு மிகுந்த பலத்தை தருகின்றன. எனினும் நாம் அவற்றை உபயோகிக்கும் முறை சரியா , அவற்றை கொண்டு நாம் படைக்கும் படைப்புகள் நம்பகத்தன்மை உடையனவா என்ற எச்சரிக்கை கலந்த பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் அவையும் ஆவணங்களாக மாறுகின்றன. என்ன இது திடீரென இப்படி ஒரு கருத்து என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இணையத்தில் எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவற்றில் சாதி, மதம் என்று பல இறுக்கமான விஷயங்கள் , இதமாக மருந்திட்டு ஆறவிடாமல் , சிலர் கார சாரமாக எழுதி வாசகர் எண்ணிக்கை கூட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ஆரா புண்ணாய் எரிய விடுகின்றனர்..
சில வருடங்களுக்கு முன்னர், சிலைகளை பற்றி நடந்த உரையாடல் ஒன்றில், நண்பர் ஒருவர், எளிபாண்டா குடவரை திருமூர்த்தி சிலையின் படத்தை போட்டார். இணையத்தில் அரை குறையாக அங்கு புத்த மத குடைவரைகளும் உள்ளன என்று படித்துவிட்டு, அவர் இதுவும் ஒரு புத்தர் சிலை. சைவர்கள் அணைத்து குடைவரைகளையும் வன்முறையால் எடுத்து, அங்கு உள்ள புத்த வடிவங்களை மாற்றி விட்டனர் என்றும், அத்தாட்சி படத்தில் இருக்கும் சிலையின் நீண்ட காதுகளை பாருங்கள் என்றார். மேலும் “இந்த படத்தை உற்று நோக்குங்கள் பாலமுகம், கம்பீரமுகம் நம்மை பார்ப்பது , தளர்ந்த முகம் சோத்தாங்கை பக்கம்,இது மத சின்னங்களான பட்டை, நாமம், எல்லாம் எங்கே, சங்கு எங்கே சக்கரம் எங்கே கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே ?” என்றும் எழுதினார்.

இந்த படத்தை தான் அவர் அங்கு இட்டார். கீழே இருக்கும் தலத்தில் இருந்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இதை முதல் பார்வையில் பார்க்கும் வாசகர்கள் அவர் சொல்வது சரிதானோ என்ற ஐயம் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் விடை அளிக்க நாம் முயற்சி செய்வோம்.
முதலில் அவர் இட்ட படமே தவறு. உற்று பாருங்கள், அவர் சொல்லும் சோத்தாங்கை பக்கம் ( உங்களுக்கு) மீசையுடன் இருக்கும் சிலை அப்படி இருக்காது. ஏன் ? யாரோ செய்த குற்றம், படம் மாறி வலையில் ஏற்றி உள்ளார். சரியான படம் இதோ.
எங்கே பாம்பு என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். அதை பார்க்கும் போதே இந்த நபர் தான் சொல்லும் இடத்திற்கு சென்றதே இல்லை என்பதும் தெளிவாகிறது. இந்த பதிவில் வரும் படத்தை பாருங்கள்.


அருகில் சென்று பாருங்கள். கையில் பிடித்திருப்பது என்ன ?
இந்த தலத்தில் 12வது படத்தை பாருங்கள் ( ASI இணைய தளம்)

திரு ஜார்ஜ் மீச்சேல் அவர்களது ஆங்கில நூல் “ELEPHANTA” , அதில் அவர் மிக அழகாக அருமையான படங்களுடன் முழு குடவரையையும் விளக்குகிறார். அவரது நூலில் இருந்து சில படங்கள் ( இன்னும் ஒரு பாம்பு உள்ளது )
பாம்பு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியாயிற்று . அடுத்து நீண்ட காதுகள். ஆகமம், சிற்ப சாஸ்திரம் என்று முழுவதுமாக விவரிக்காமல் , மேலோட்டமாக பார்ப்போம். ( மேலே படிக்க வேண்டும் என்றால் திரு கோபிநாத் ராவ் அவர்களது Elements of Hindu Iconography நூலை படிக்கவும் – ஒரே ஒரு பக்கம் மட்டும் இணைக்கிறேன் ),சிற்ப சாஸ்திரங்கள் சமண, பௌத்த , இந்து சிற்பங்கள் என்று தனித்தனியாக பிரிப்பதில்லை. எல்லா சிலைகளுக்கும் ஒரே அளவுகள் தான்.

உதாரனத்திற்க்கு, அவர் காதை பற்றி கேள்வி எழுப்பியதால், சிற்ப சாஸ்திர முறை படி வரைந்த ஒரு காதை ( அதே நூலில் இருந்து ) பாருங்கள்.

இந்தக் காது, நமது திருமூர்த்தி உருவத்தின் காதின் அளவுகளுடன் ஒத்து போகுமா ? முழு ஆராய்ச்சி போல அகல நீளம் அளக்க வில்லை – நம் பார்வைக்கு எப்படி தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்கு பார்ப்போம்.
சுவாரசியமாக இருக்கிறது அல்லவா. சரி, இதே காது , ஒரு சிவன் சிலைக்கு பொருந்துமா. எதோ ஒரு சிவன் சிலை இல்லை, சோழர் கால செப்புத் திருமேனி, அதுவும் புகழ் பெற்ற ரிஷபாந்தகர் சிலை ( நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்த வடிவம் தான் )
அவரது காது இப்போது நமக்கு தேவை. இதோ

இரண்டு காதுகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா ?
எப்படி இருக்கிறது பொருத்தம் ?
நண்பர், மேலும் குடவரையில் இருந்த அணைத்து பெளத்த சிலைகளையும் சைவ சிலைகளாக மாற்றிவிட்டனர் என்றும் கூறினார். நண்பர் நன்றாக தேடி படித்து பார்த்திருந்தால் , குடவரைக் கோயில் – ஒரே கல்லால் ஆனா சிலைகள் இவர். அதுவும் ஒன்றோ இரண்டோ சிற்ப்பங்கள் இல்லை, மொத்தம் பதினாறு புடைப்புச் சிற்ப்பங்கள், வாயிர்க் காப்போன், பூத கணம் என்று ஒரு பெரும் படையே உள்ளே இருக்கு என்று நண்பருக்கு தெரிந்திருக்கும்.
விக்கி தலத்தில், குடைவரையின் அமைப்பு , அதில் இருக்கும் சிற்ப்பங்கள் என்று முழு விவரமும் இருக்கின்றனவே!!
நடு மண்டபம்
1. ராவணன் கைலாய மலையை அசைக்கும் காட்சி
2. ஈசனும், உமையும் கைலாயத்தில்
3. உமையொருபாகர்
4. திருமூர்த்தி
5. கங்காதர வடிவம்
6. பார்வதி கல்யாணம்
7. அந்தகாசுரன் வதம்
8. நடராஜர்
9. யோகிஷ்வர
16. லிங்கம்
கிழக்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்
10. கார்த்திகேயன்
11. மாத்ரிகா
12. பிள்ளையார்
13. வாயிர்க் காப்போன்
மேற்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்
14. யோகிஷ்வர
15. நடராஜர்
ஒவ்வொரு சிற்பமும் அருமையான படைப்புகள். ஆனால் எங்கும் ஒரு கல்வெட்டு கூட இல்லை, இதன் காலம், கட்டிய மன்னர் யார் – எதுவும் தெரியவில்லை. சுமார் கி பி 8th நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் குப்தர் இல்லை சாளுக்யர் கலை தாக்கம் இருக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். .
உண்மை ..அறிவு …ஆனந்தம்