சித்தன்னவாசல் ஓவியத்தை பற்றி முதல் பதிவை எழுதி பல மாதங்கள் ஆகி விட்டன. நண்பர்கள் பலரும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாமதம் செய்யாமல் இதோ. (முதல் முறை தளத்திருக்கு வரும் வாசகர்கள் இந்த பதிவின் முதல் பாதியை படித்துவிட்டு இங்கு வரும்படி வேண்டுகிறேன். )
நண்பர் அசோக் உதவியுடன், பல நாட்கள் தவமிருந்து கிடைத்த புகைப்படங்கள். அசோக்கிடம் ஒரு கேமரா
ஒரு கணினி கொடுத்துவிட்டால் போதும். எந்த கடினமான இடத்திற்கும் சென்று திறம்பட படம் பிடித்து வந்துவிடுவார். அவர் மட்டும் இப்படி நமக்கு படங்களை தந்து உதவவில்லை என்றால், நாமும் சித்தன்னவாசல் போனேன் – எதையோ பார்த்தேன் என்று நடையை கட்டிக்கொண்டு போயிருப்போம்.
அந்த ஓவியங்களில் உள்ள காட்சிகளை, எப்படித்தான் அந்த ஓவியன், மேலே இருக்கும் சுவரில் , குடவரையில் உள்ள குறைவான வெளிச்சத்தில் , சாரம் கட்டி படுத்துக்கொண்டு தூரிகை கொண்டு தீட்டினானோ என்று மீண்டும் மீண்டும் வியக்கத் தோன்றுகிறது.
சென்ற பதிவில் பார்த்த குளம் காட்சியின் தொடர்ச்சி தான் இன்று. மூன்று பறவைகள், ஒரு மனிதன், ஏன் ஒரு யானை கூட இங்கே இருக்கிறது என்றால் – முதல் பதிவை கூர்ந்து கவனிக்க தவறியவர்கள் – நம்பமுடியுமா. கூடவே எங்கும் நீந்தும் மீன்கள் வேறு
கட்டம் கட்டி காட்டுகிறேன் – இப்போது தெரிகிறதா ?
சரி, சென்ற பதிவை போலவே, மற்ற இடங்களில் வண்ணம் இல்லாமல் இதோ
இப்போது தெரிகின்றனவா ? மேலே, இடது பக்கம், ஒரு பறவை கண் தெரிகிறதா ?
வலது பக்கம் ஒரு மீன் ?
அடுத்து இரு பறவைகள் மற்றும் மீன்கள்?
கோமணத்துடன் குளத்தில் இறங்கி பூக்களை பறிக்கும் வாலிபர் ?
கோட்டோவியம் இதோ !

வாலிபர் பறிக்கும் பூக்களில் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அதை முடிவில் பார்ப்போம், அடுத்து கம்பீர தந்தங்களை கொண்ட யானை.
அதனைச் சுற்றியும் மீன்களின் கூட்டம்
அடியிலும் இன்னும் நிறைய நீந்தும் மீன்கள்
நாம் கவனிக்க வேண்டிய விஷயம், குளத்தில் தாமரைப் பூக்களும் அல்லிப் பூக்களும் இருக்கின்றன. இவற்றை முறையே பறிக்கும் காட்சி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இரு மலர்களின் வேற்றுமையை மலர்களின் தண்டுகளில் காட்டியிருக்கிறான் ஓவியன். இதற்கு மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் இரு மலர்களை அருகில் சென்று பார்ப்போம்.
இணையத்தில் கிடைத்த படங்கள் – தாமரை மற்றும் அல்லி மலர்களின் தண்டுகள்
அல்லித் தண்டு வழவழவென ஒரு மங்கையின் கரம் போல இருக்க, தாமரைத் தண்டோ முரடனின் கைகளை போல உள்ளன – பார்த்தீர்களா? இப்போது மீண்டும் ஓவியத்தை பாருங்கள்
என்ன அருமையான கலை – நமது ஓவியக்கலை !