நாம் முன்னர் மல்லையில் தவம் சிற்பத்தில் பூத கணத்தின் வயிற்றில் புலி முகத்தை பார்த்தோம். இவரை பற்றி தோழி காத்தி உடன் பேசினேன் , அவர் உடனே இதே போல இன்னொரு சிற்பம் ஒரு சோழர் கோயிலில் பார்த்தேன் என்றும் அதன் படத்தையும் அனுப்பி வைத்தார். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், அளவில் சிறியது என்றாலும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்த்து விளங்கும் ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாத கோயில் சிற்பம்
அங்கே பல அற்புத சிற்பங்கள் இருந்தும் இன்று சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு மகர தோரணம், அதில் நம் நண்பர் புலி தொப்பையை மீண்டும் சந்திப்போம்.
அருமையான இரு கன்னியர் சிற்பம் – ( அவர்களை அடுத்து வரும் மடல்களில் பார்ப்போம் ) – நடுவில் சற்று மேலே மகர தோரணம். படத்தை பாருங்கள்.
எங்கெங்கும் சிற்பங்கள் – அப்பப்பா, இந்த சிறிய இடத்தில் எவ்வளவு நுண்ணிய வேலைப்பாடு! மகர யாளிகள் – அவற்றின் வாயில் இருந்து வெளி வரும் சிங்க யாளிகள், அவற்றின் மேல் வாளேந்திய போர் வீரர்கள் , ஒருவருடன் ஒருவர் போர் புரிந்து கொண்டு உள்ளவாறு செதுக்கப்பட்ட விதம் அருமை .
சிற்பத்தின் நடுவில் பூமாதேவியை காப்பாற்றிய வெற்றி பரவசத்தில் வராஹ மூர்த்தி, நான்கு கரங்கள் – மேல் இரண்டில் சங்கு , சக்கரம் , பூமாதேவியின் பக்தி நிலை – இரு கரம் கூப்பி , அவர்களை ஆசை அன்புடன் மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி, அத்துடன் நிறுத்தவில்லை சிற்பி ( மல்லை மற்றும் உதயகிரி வடிவங்கள் பார்த்தோம் அல்லவா ) – அவற்றை போலே இந்த சிறு சிற்பத்திலும் அவன் வராஹ மூர்த்தியின் கீழே நாகராஜன் மற்றும் நாகராணியை செதுக்கி உள்ளான்.
அவரைச் சுற்றி பூத கணங்கள் – எருமைத்தலையுடன் ஒரு பூதம் – அடுத்து நம் நண்பர் புலி தொப்பை – ஆள்காட்டி விரலால் வாயை இழுத்து முகம் காட்டும் வண்ணம் மிக அருமை. இங்கு புலி தொப்பை கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. இவர் புள்ளமங்கை கோயிலிலும் வருவார். இது போல வேறு இடங்களில் பார்த்தீர்கள் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் இவர், யார் அந்த எருமை தலை – இவர்களுக்கு பெயர் உண்டா?
ஒரு அற்புத சிற்பத்தை நமக்கு தந்த காத்தி மற்றும் படங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் – இருவருக்கும் நன்றி