நண்பர் திரு சதீஷ் அவர்கள் இந்த வாரம் தாராசுரம் செல்கிறேன் என்றார். அங்கே மண்டப தூண்களில் ஸ்கந்த புராணம் சிற்பங்கள் உள்ளன என்றும் அதை படம் பிடித்து வருமாறு கேட்டேன்.அவரும் அவ்வாறே எடுத்து வந்துள்ளார். அருமையான சிற்பங்கள். அவற்றை விளக்க நல்ல தமிழ் உரை தேடும் பொது நண்பர் வைரம் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் இதன் வர்ணனை உண்டு என்று ஒரு ஆங்கில நூலை தந்தார். படித்த பின், மதுரை திட்டத்தில் தேடி அண்மையில் அந்த நூலும் இந்த அற்புத திட்டத்தில் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து அவற்றை எடுத்து திரு திவாகர் அவர்களின் உதவியுடன் இங்கே படைக்கிறேன். இணையத்தின் அற்புதம் – நண்பர்களின் உதவி – உருவாகிறது பார்வதி கல்யாணம். இதனை நாம் முன்னர் பார்த்த தஞ்சை தக்ஷ வதம் கதைக்கு தொடர்ச்சி என கருதி வாசிக்கவும்.
புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா
முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள்.
“ஒரு ஆறு வயதுச் சிறுமி செய்யும் தவமா இது? இப்படி தவம் செய்வது இவளுக்குத் தகுமோ.. பார்வதியே.. உமையே.. அறியாமல் செய்கிறாயே.. இப்படியா தவம் செய்வது.. சிவன் அவன் அருள் வாய்க்குமோ.. அவனையே மணம் செய்வேன் என்று தவம் செய்தால் பெறக் கூடிய அத்தனை எளியனா சிவன்? ஆனாலும் இத்தனைக் கடினமான தவம் உனக்கு வேண்டுமோ.. யோசித்துப் பார்..”
“தவம் செய்யத் தொடங்கிவிட்டேன்.. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த இறைவனையே மணம் முடிப்பேன்.. என்னுடைய தலைவனே வந்து தவத்தை விடு என்றாலும் விடேன்.. இத்தகைய கடிய நோன்பினால்தான் இனி உயிர் வாழவேண்டுமென்றால் அப்படியே என் வாழ்க்கை முழுதும் கழிப்பேன்”
மேற்கண்டவை மாய மறையோன் வடிவம் தாங்கி சோதனை செய்த இறைவனுக்கும், அந்த இறைவனுக்காகவே வேண்டி கடுந்தவம் செய்யும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் கச்சியப்ப சிவாச்சாரிய முனிவர் எழுதியுள்ள கந்தபுராணத்தில் வரும்.
http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/pdf/pm0239.pdf
கந்தபுராணம் சிவபுராணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அட்டகாசம் செய்து தேவர்களை சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல் மூவுலகையே அச்சுறுத்திவந்த அசுரர்களின் தலைவனான சூரபன்மனை வதைக்க தானே ஒரு மகனைப் பெற்றுத் தருவதாக இறைவன் தேவர் முதலா அனைவருக்கும் அபயம் தருவதில் ஆரம்பித்து, அதற்கான வகைகளில் ஒன்றாக பர்வதராஜனின் மகளாக பார்வதிதேவி பிறந்து ஈசனை மணக்க தவம் செய்யும் காட்சிதான் இந்த சிற்பம்.
இதற்கு முன்புதான் மன்மதபாணங்களை வீசி காதலரை அல்லல் படுத்தும் காமன் சிவனின் மூன்றாவது கண்ணின் வெப்பத்தால் சாம்பலாகிப் போனதால் ( இதையும் நாம் தஞ்சை பெரிய கோயில் சிற்பத்தில் பார்த்தோம் ), அம்மை பார்வதியின் தவம் மிக மிகக் கடுமையாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேவியை அனைவருமே பரிதாபமாகப் பார்த்து இந்தத் தவத்தைக் கைவிடுக.. என்று சொன்னாலும், ஈசனே மாறுவேடத்தில் வந்து கேட்டும் – இறைவனை மணக்க எப்படிப்பட்ட துயர் வந்தாலும் அதைத் தாங்குவேன் என்கிறாள் சக்தி.
இனி சிற்பத்துக்கு வருவோம்..
தராசுரம் கோவில் தூணில் இருக்கும் அருமையான கந்த புராணத்தை விளக்கும் சிற்பங்கள் – முதல் சிற்பம் இன்று பார்போம். அடுத்தடுத்து வரும் மடல்களில் கதை கேற்ப சிற்பங்களை பார்ப்போம்.
தூண் – கீழே இருந்து மேலே நகர்கிறது கதை. பார்வதியின் தவத்தை கண்டு அனைவரும் வியக்கின்றனர். ஊர் முழுவதும் இதே பேச்சு தான் போல. தோழியர் மூவர் ஈசனை நினைத்து லிங்கத்தின் முன் பூஜை செய்யும் தேவியை வணங்குகின்றனர். போதும் தவம் – என்கிறார்களோ ?
மேலே – பார்வதி ஒரு காலில் நின்று கடுந்தவம் புரிகின்றாள் – இரு புறம் தீ பிழம்புகள் – அப்படியும் ஈசன் மனம் இறங்கவில்லை – அடுத்து என்ன – மழைக்காலம் வந்து விட்டது ….. தொடரும் .