மல்லையில் சிற்பங்களை செதுக்கி நம்மை மனம் கிறங்க வைத்த அந்த சிற்பிகளின் கூரிய ஞானம் இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை இன்னமும் ஆச்சரியமான ஒன்றுதான். ஒவ்வொரு சிற்பியும் ஒருவகையில் தன் கூரிய ஞானத்தை அற்புதமான வகையில் எங்காவது ஒரு சிற்பத்திலாவது காண்பித்துவிடுவான். ஒவ்வொரு சமயம் அந்தக் கூரிய ஞானமானது வழக்கமான இறை உருவத்தினின்றும் திசை மாற்றி அவனையே இழுத்துச் சென்று வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் போலும். ஆனால் அங்கும் அவன் ஒரு அற்புதத்தை நமக்குப் பரிசாகத் தருகின்றான்.
அப்படிப்பட்ட ஒரு அருமையான பரிசுதான் – மல்லையில் திருமூர்த்தி குகைக்கு பின்னால் இந்த அதிசய சிற்பத்தை வடித்துள்ளான்.
ஆண் யானையின் பிரம்மாண்ட வடிவம், அதன் பின்னே எட்டிப் பார்ப்பது போல பெண் யானையின் தலை, அந்த ஆண் யானையின் கீழே தன் தும்பிக்கையால் மண்ணைக் கிளறிக் கொண்ட்இருக்கும் ஒரு மகவு யானைக்குட்டி, இன்னொரு பக்கத்தில் (தலைஇழந்த நிலையில்) இன்னொரு குட்டி யானை. சரி.. அந்த பெரிய ஆண் யானையை சற்று உற்றுக் கவனியுங்களேன். எங்கள் குடும்பத்துக்கு நான் தான் தலைவனாக்கும் என்பது போல ஒரு பெருமையில் நிற்பதும். ‘நானும் இங்கேதான்.. தாய்தான் தலைவியாக்கும்’ என்பது போல அந்த பெண் யானை எட்டிப் பார்ப்பதும்.. எத்தனை பெரியவர்களாய் இருந்தால் என்ன, எங்களைப் போல விளையாடத் தெரியுமா’ எனக் குறும்பாகக்கேட்பது போல குட்டிகள்.
ஆனால் அந்த யானைக் குடும்பத்திற்கு மேலே – ஒரு அழகு மயிலையும் அருகேயே ஒரு குரங்கையும் செதுக்கி இருக்கும் அந்தக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே உயிர் குரங்கு சிலையாய் மாறியது போல உள்ளது. பல்லவ சிற்பி ரசவாதம் தெரிந்தவனோ? அல்லது மந்திரவாதியோ ? உயிருடன் இருப்பவரை கல்லுக்குள் சிக்க வைத்து விடுவானோ ?
சரி.. யானைக் குடும்பத்திற்கும் மயிலுக்கும் குரங்குக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அங்கே குரங்கை செதுக்கினான்.. அழகு மயில் மூலம் அவன் என்ன சொல்ல வந்தான்..
அதெல்லாம் சரி!. இப்படியும் ஒரு சிலை செதுக்கவேண்டும் என ஏன் அந்த சிற்பி சிந்திக்கவேண்டும்..ஒரு ஓவியன் உதிக்கும் சூரியனை பாத்தவுடன் சித்திரம் தீட்டுகிறான், புலவன் காதலியின் கயல் விழியை கண்டதும் கவிதை இயற்றுகிறான்….ஆனால் இந்த கலைஞனோ சிந்தனையுள் உதித்த இந்த சிற்பங்களுக்காக எத்தனை இரவு பகல் செலவழித்தானோ..ஏன் பலநாள் இந்த சிற்பத்துக்காக முனைய வேண்டும்.. புதிர்தான்.. புதிரை நம்மிடமே நிரந்தரமாக விட்டுவிட்டான் போலும்
படங்கள் : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் – திரு ஸ்ரீராம் மற்றும் வெங்கடேஷ்