இந்த சிற்பத்தை செதுக்க உத்வேகம் என்ன – பல்லவ மல்லை – எனது விளக்கம்

இந்த சிற்பத்தை நாம் முன்னர் பார்த்த போது ஒரு கேள்வி கேட்டேன். இந்த சிற்பத்தை செதுக்க சிற்பிக்கு என்ன உத்வேகம்? இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சிற்பம். ஏனெனில் மல்லையில் பல இடங்களில் மிருகங்கள் மற்றும் பறவைகள் மிக அருமையாக செதுக்கிய சிற்பி – தவம் சிற்பத்தில் ஒரு முழு காட்டையே செதுக்கிய சிற்பி, கோவர்தன சிற்பத்தில் மாடுகள் – என்று பலவை இருந்தும் அவை அனைத்தும் புராண கதைகள் மற்றும் தெய்வங்களை ஒட்டியே வந்தன. இந்த சிற்பத்தில் உள்ள விசேஷம் – இது ஒரு சாதரண காட்சி.

இதை வடிக்க எந்த மன்னனும் ஊதியம் அளித்திருக்க மாட்டான். அதே போல இது ஒன்றும் ஒரு இரவில் கிறுக்கிய சித்திரம் அல்ல. பல மாதங்கள் கை வலிக்க , நெற்றி வியர்வை சிந்த, கருங்கல்லை செதுக்கும் வேலை. அப்படியானால் , இதில் அவன் வேறு எதாவது நமக்கு சொல்ல வருகிறானோ ?

சரி மீண்டும் சிற்பத்தை பார்ப்போம்

ஒரு மகிழ்ச்சி ததும்பும் யானைகளின் குடும்பம் – அதிலும் சின்ன யானையின் கவலை இல்லா வேடிக்கை விளையாட்டு
297729862979
ஒரு அழகு மயில்

ஒரு குரங்கு – குரங்கின் பார்வையில் எதோ ஒரு தேடல் ,ஒரு ஏக்கம். மற்ற மிருகங்களை போல அல்லாமல் அது வெளி பக்கமாக திரும்பி வருபவரை நோக்கி உள்ளது.
297029772989
சரி, இதற்கு ஒரு விளக்கம் தந்து பார்ப்போம்

சிற்ப கலை ஒரு அற்புத கலை – அதை எளிதில் கற்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டு படித்தாலும், ரத்தத்தில் கலை உணர்வு, நினைவில் இறை உணர்வு என்று பல சரியாக அமைய வேண்டும். அப்படி இருக்கையில் சிறு வயதிலேயே சிற்பி தனது அனைத்து ஆசைகளையும் கட்டுப்படுத்தி தன் சிந்தனை முழுவதையும் ஒருமுக படுத்தி கலையில் ஈடு பட வேண்டும். அவனுக்கென்று ஒரு குடும்பம் , தாய் , தந்தை, தமையன், தாரம் இருந்தாரோ , இல்லையோ – அவன் பணி – கலை பணி

அப்படி இருந்த அவன் ஒருநாள் சற்று தன் நிலைமையை நினைத்து பார்க்கிறான். இப்போது சிற்பத்தில் உள்ள குரங்கு தான் அவன். யானை குடும்பம் – அவன் அனுபவிக்காத சுகம். மயில் அவனது காதலி / துணைவி – அனைத்தையும் துறந்து கலைக்கு தன்னை அர்ப்பணித்தான் சிற்பி. எனினும் அடி மனதில் ஒரு நெருடல் – என்ன அது ?

இப்போது மீண்டும் குரங்கை பாருங்கள் ! அது உங்களை பார்த்து சிற்பி கேட்கும் கேள்வியின் பிரதிபலிப்பு என் தியாகத்தின் விளைவு இந்த சிற்பம்! இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன – அவன் துறந்த மகிழ்ச்சிக்கு அவன் உருவாக்கிய அழியா சிற்பங்கள் ஈடா ?
29722989

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *