கத்தியை மட்டும் தீட்டினால் போதாது, புத்தியையும் தீட்டணும்… அனுமன் vs ஸுரஸை

ராமாயணத்தில் மிகவும் பிடித்த பாத்திரங்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஹனுமார் தான். அதுவும் அவரது அற்புத சாகசங்கள் மிகுந்த குழந்தை பருவக் கதைகள் அருமையாக இருக்கும். அப்படியே வாய் பிளந்து பாட்டி கதை சொல்லுவதை கேட்ட பசுமையான நினைவுகள். ஒவ்வொரு கதையிலும் ஒரு அடிக்கருத்து இருக்கும். அபூர்வ சக்திகள் கூர்மையான மூளையுடன் இணையும் அவரது பாத்திர சித்தரிப்பு அருமை.

அப்படி ஒரு கதையை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். திரு KK மாமா அவர்கள் தம்மல் வரா​ஹேஸ்வரர் ​ஆலயத்தின் உள்ள ஒரு தூண் சிற்பத்தை அற்புதமாக படமெடுத்து தந்தார். மேலும் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களது முன்சிறை சிவன் கோயில் (கன்யாகுமாரி) படமும் இணைய தேடலில் கிடைத்தது.

கதை சிறியது தான். பெரும் ஆபத்து எதிரில் வரும்போது, கத்தியை மட்டும் தீட்டினால் போதாது, புத்தியையும் தீட்டிய அனுமனின் அற்புத செயல்.

கடல் தாவு படலத்தில் அனுமனை எதிர்க்கொண்ட ஸுரஸை

சீதையை தேடி இலங்கையை நோக்கி தாவும் அனுமனின் ஆற்றலை சோதிக்க விண்ணவர் கூடி, நாகர் குல அரசியான ஸுரஸையை ஏவுகிறார்கள். அவளும் பயங்கர அரக்கி வேடம் பூண்டு அனுமனை எதிர்க்கொண்டு , நீ என் வாயினுள் நுழையவேண்டும் என்கிறாள். வந்திருப்பது அரக்கி அல்ல, தனக்கு விண்ணவர் வைக்கும் போட்டி என்றெல்லாம் அவருக்கு தெரிந்ததோ இல்லையோ, போரிட்டு நேரத்தை வீணாக்காமல் அனுமன், தன் உருவத்தை பெரியதாக ஆக்குகிறார். ஸுரஸையும் தனது வாயை அதற்கேற்ப பெரிதாக்குகிறாள். திடீரென தன் உருவத்தை கொசு அளவிற்கு குறைத்து அவளது வாயினுள் சென்று வெளிவருகிறார் ஹனுமார்.

மேலும் விரிவாக படிக்க விரும்புவோர் கீழே சொடுக்கவும்..

ஸுரஸை தோன்றுதலும், அனுமன் அவளை வென்று விரைதலும்

மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ ‘ என்று,
ஆன்றுற்ற வானோர் குறை நேர, அரக்கி ஆகித்
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 53

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு, பெட்பின் ஓங்கி,
‘கோள் வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய்! எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்கொல்?’ என்னா,
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள். 54

‘தீயே எனல் ஆய பசிப்பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே, விரைவுற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்; வழி மற்று இலை, வானின்’ என்றாள். 55

‘பெண்பால் ஒரு நீ; பசிப் பீழை ஒறுக்க நொந்தாய்;
உண்பாய் எனது ஆக்கையை; யான் உதவற்கு நேர்வல்-
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால்’ எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள், 56

‘காய்ந்து, ஏழ் உலகங்களும் காண, நின் யாக்கைதன்னை,
ஆர்ந்தே பசி தீர்வென்; இது ஆணை’ என்று அன்னள் சொன்னாள்;
ஓர்ந்தானும், உவந்து, ‘ஒருவேன்; நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன்; வலையாம்எனின் தின்றிடு’ என்றான். 57

அக்காலை, அரக்கியும், அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு வாய் திறந்து,
விக்காது விழுங்க நின்றாள்; அது நோக்கி வீரன்,
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான். 58

நீண்டான் உடனே சுருங்கா, நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர்,
மீண்டான்; அது கண்டனர் விண் உறைவோர்கள்; ‘எம்மை
ஆண்டான் வலன்’ என்று அலர் தூஉய், நெடிது ஆசி சொன்னார். 59

சரி இப்போது, சிற்பத்திற்கு வருவோம். முதலில் தம்மல்

மிகவும் அருமையான சிற்பம். வாயினுள் நுழையும் ஹனுமானின் கால்கள் மட்டுமே தெரிந்தாலும், நேர்த்தியாக வளையும்படி செதுக்கி உள்ள சிற்பியின் ஆற்றல் அருமை. இந்த கதை தெரியாதவர்கள் யாரையோ விழுங்குகிறாள் அரக்கி ! பாவம் ! என்று பார்த்து விட்டு சென்றுவிடுவார்கள்.

அடுத்து முன்சிறையில் உள்ள சிற்பம்.

இங்கே வர்ணனைக்கு சற்று மாறாக வாயினுள் நுழையும் அனுமன் காது வழி வெளிவருவது போல உள்ளது. இது கதையை ஒட்டி அல்ல, ஏனெனில் இவ்வாறு வெளிவந்தால் செவியின் ” ஜவ்வு ” கிழிந்து விடும். சிற்பி கதையை சற்று மாற்றி விட்டானோ?

( இதே போல சுசீந்தரம் கோயிலிலும் ஒரு தூண் சிற்பம் இருக்கிறதாம். வெகு நாட்காளாக தேடி வருகிறேன். வாசகர்கள் முடிந்தால் தேடி அனுப்புங்கள் )

இணையத்தில் இந்தக் கதையின் மேலும் சில வடிவங்கள்.


http://www.kidsgen.com/fables_and_fairytales/indian_mythology_stories/hanuman_meets_surasa.htm
http://www.hinducounciluk.org/newsite/circulardet.asp?rec=84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *