சம்பா ( வியட்நாம்) சிற்பங்கள் – பாகம் 1

சம்பா அல்லது சாம் என்றால் நம்முள் பலருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்நாளைய வியட்நாமில் ஏழாம் நூற்றாண்டில் ஒரு அற்புத நாகரீகம் தழைத்தது. இவர்கள் வியத்நாமின் நடுப்பகுதியில் தற்போது தனாங் என்று விளங்கும் நகரின் அருகில் ஆரம்பித்து முதலில் பெரும்பாலும் சைவ சமயத்தை பின்பற்றினர். இந்திரபுரம் , அமராவதி , பாண்டுரங்க , விஜய என்ற நகரங்கள் அங்கே இருந்தன.

சாம் ஹிந்து கலைச்சின்னங்கள் மிகவும் அரியவகை கலை பொக்கிஷங்கள். பெரும்பாலும் வியட்நாமின் வெளியில் இவற்றை பார்க்க இயலாது. அங்கே கூட பெரும்பாலான சிற்பங்கள் மற்றும் ஆலயங்கள் அங்கே நடந்த போர்களில் மிகவும் சிதைந்து விட்டன. தற்போது தனாங் மற்றும் சைகோன் அருங்காட்சியங்கங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் தனாங் அருகே உள்ள சில செங்கல் கட்டுமான கோயில்களே எஞ்சியவை. அங்கே பல லிங்க ரூபங்கள், முகலிங்கங்கள், கருடன், சயன பெருமாள் உருவங்கள் மற்றும் விநாயகர் உருவங்கள் உள்ளன.

இன்று நாம் பார்க்கவிருக்கும் சிற்பம் தொன்மையான சாம் விநாயகர் உருவம் – 8th C CE.

சாம் கலை அட்டவணை இவ்வாறாக பிரிக்கப்படுகிறது. ( அவை கண்டெடுக்கப்பட்ட இடங்களின் பெயர்களை ஒட்டி )

மை சொன் E1 (7th – 8th நூற்றாண்டு CE)
டாங் டுஒங் (9th – 10th நூற்றாண்டு CE)
மை சொன் A1 (10th நூற்றாண்டு CE)
க்ஹுஒங் மை (10th நூற்றாண்டு CE முதல் பாகம் )
டிரா கியு ( 10th நூற்றாண்டு CE இரண்டாம் பாகம் )
சான் லோ ( 10th நூற்றாண்டு இறுதி முதல் 11th நூற்றாண்டு CE நடு பாதி )
தாப் மாம் (11th முதல் 14th நூற்றாண்டு CE)

நாம் பார்க்கும் விநாயகர் சிலை ஒருவகை மணற் கற்பாறையில் ( sandstone) செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் தொன்மையான இந்த வடிவத்திலும் விநாயகர் வழிபாட்டின் கோட்பாடுகள் கடைபிடிப்பது வியக்க வைக்கிறது. மிகவும் சிதைந்த நிலையில் இருக்கும் இந்த சிலையில் ஒரே ஒரு கை மட்டுமே எஞ்சி இருந்தாலும் அது பிடிதிருக்க்ம் வஸ்து நம்மை திகைக்க வைக்கிறது.

அப்படி என்ன அவர் கையில் ? ஆமாம், ஒரு உரித்த சோழ கதிர் ஒன்றை கையில் பிடித்துள்ளார். அதன் வெளித் தோல் உரித்து இருக்கும் படி காட்சி இருப்பது மிக அருமை.

தொழில் ஒரு நாகம் பூணூலாக – நாக யக்நோபவீதமாக இருக்கிறது.

கையில் அணிகலன்கள் மற்றும் தலையில் கிரீடம் தெரிகிறது. அவரது கால் விரல்கள் மற்றும் இடுப்பில் வெட்டி மிக அழகு. கண்களை தனியாக பொருத்துவார்கள் போல உள்ளது. ஒருவேளை விலை உயர்ந்த மாணிக்க கற்களை வைப்பார்களோ?

நண்பர் ஓவியர் திரு ஸ்ரீநிவாஸ் க்ரோமா அகாடமி , உதவியுடன் இந்த சிலையின் முழு வடிவத்தையும் காண ஒரு முயற்சி.


இந்த சாம் சிற்பம் அதே சம காலத்து தெனிந்திய விநாயகர் சிலைகளில் இருந்து மிகவும் வேறுபடுகிறது.

இதை பற்றி இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். தென்னாட்டில் மிக தொன்மையான விநாயகர் வடிவங்களில் இந்த வீராபுரம் (குர்நூல் – ஆந்திரா ) களிமண் சிலையும் ஒன்று.
( நன்றி – Ganesh: studies of an Asian god By Robert L. Brown) – காலம் சுமார் 2nd C BCE !!

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு அற்புத சிற்பம்

படங்கள் : திரு வசந்தா பெர்னாண்டோ
Vietnam History Museum Address:
Nguyen Binh Khiem Street, District 1, Ho Chi Minh City.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *