கத்தி இன்றி சுத்தி இன்றி ஒரு ஆலயத்தை எப்படி வீழ்த்துவது !

புரிகிறது – தலைப்பு சற்று திகைப்பூட்டுவது தான். எனினும் நாம் இன்று பார்க்கப் போகிற காட்சிகள் அப்படி ஒரு தலைப்பை நியாயப்படுத்துகின்றன. இந்தியாவில் சரித்திர சின்னங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்று சொல்வார்கள். அது இப்படி கிடக்கும் என்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. நண்பர் சங்கருடன் அரக்கோணம் பக்கம் சில கோயில்களைத் தேடி செல்லும் வழியில் தொலைவில் ஏதோ ஒரு அமைப்பு தென்பட்டது. மிகவும் பயிற்சியான உருவம்போல இருந்தது. ஒருவேளை ..


காரை நிறுத்தச் சொலி இறங்கி அதை நோக்கி ஓடினோம். அருகே செல்ல செல்ல அது விஸ்வரூபம் எடுத்தது. எங்கள் மனம் துக்கத்தால் கனக்க துவங்கியது.

காலுக்கு அடியில் சர சர என்று எதோ ஊறுவது போல இருந்தது. வரப்பை ஒரு பாம்பு தாண்டிச்சென்றது. ஆனால் நாங்கள் அதை பொருட்படுத்தாது மேலே சென்றது அந்த பாம்புக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் எதிரே நாங்கள் காணும் காட்சியால் ஏற்பட்ட அதிர்ச்சி அதற்க்கு தெரிய வாய்ப்பில்லை.

கருங்கல் தளம், செங்கல் திருப்பணி என்று நீண்டு உயர்ந்த பெரும் கோயில் எங்கள் கண்முன்னே சிதைந்து கிடந்தது. வெறும் செங்கல் கொண்டு இப்படியும் ஒரு கோயில் எழுப்ப முடியுமா என்று நாம் கொண்டாட வேண்டிய கோயில். நம்மவர்கள் செங்கல் திருடியும் தொங்கு பாலம் போல நிற்கும் செங்கல்களை பார்த்து அதை அப்படி கட்டிய திறனையும் வணங்கினோம்.

காலில்லாத நண்பர் நினைவு திடீரென மீண்டும் வர, சற்று தயங்கியே சென்றோம். கருவறை முக மண்டபம் என்று எங்கும் நாசம்.

நாங்கள் எந்த கோயிலுக்கு சென்றாலும் அங்கே கோயில் கோபுரங்களிலும் விமானங்களிலும் வளரும் சிறு சிறு செடிகளை பிடுங்கி போட்டு சிறு சிறு மராமத்து வேலைகளை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வோம். இந்தச் செடி என்ன செய்யும் என்று பலரும் அப்படி செய்வதில்லை. அவ்வாறு இருந்ததன் விளைவை இப்போது பாருங்கள். ஒரு பத்து வாலிபர்கள் சேர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை உழவாரப்பணி ஒரு சண்டே அவுட்டிங் மாதிரி செய்தால் போதுமே.

அப்படி செய்யாததால் மரத்தின் வேர் கோயிலை அப்படியே இரண்டாக பிளப்பதை பாருங்கள்.

என்ன சொல்வது – வார்த்தைகள் வரவில்லை. அருகில் இருக்கும் கம்பத்தை கொண்டு இதன் உயரத்தை கணக்கு போடுங்கள். இது ஏதோ தெரு முக்கு சிறு ஆலயம் அல்ல – அதன் காலத்தில் பெரும் முயற்சியுடன் எழும்பிய கம்பீர கோயில் . மனிதரிடத்தில் இன்று தோற்று அழியும் அவலம்.

ஊர் காரர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல. அருகிலேயே புதிய கோயில் அமைத்து அதற்கு நன்கொடை வசூலித்து ( நாங்கள் போகும் போதே அது ஒரு பக்கம் சாயத் துவங்கிவிட்டது !) அவர்கள் தங்கள் கடமையை செய்து விட்டனர். ஆனால் இப்படி ஒரு அற்புத புராதன சின்னத்தை சிதைத்து மண்ணிலும் மரத்திலும் புதைக்க விட்டதன் கரை நம் நெஞ்சை விட்டு என்றும் போகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *