சேரன்மாதேவியில் உள்ள சோழ பாண்டிய ஆலயமும் அதன் ரகசியமும் – பாகம் 2

நிலவறை, சுரங்கம், புதையல் – மன்னர்கள் , பொக்கிஷம் – இப்படி அடுக்கியவுடனே நமக்குள் மளமள என படித்த சரித்திர கதைகள் , கேட்ட வதந்திகள் அனைத்தும் கண்முன்னே ஓடும். சிறுவயது முதலே இவை நமக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்குவதை மறுக்க முடியாது. (அதுவும் இப்போது திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி நிலவறைகள் ரொம்ப புகழ் பெற்றதாயிற்றே) இன்றும் நாம் இவை பற்றி ஆவலுடன் படிக்கிறோம் , பெரிய பெரிய ஹாலிவுட் இதை வைத்து படங்கள் எடுக்கிறார்கள் என்பதைக் கொண்டே இதன் பால் நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பை அறியலாம். அப்படி என்ன இருக்கு இந்த சுரங்கங்களில் என்று நீங்கள் கேட்கலாம். கோயில்கள் நமது பாரம்பரியத்தை மட்டும் காக்கவில்லை , அந்நாட்களில் மன்னனும் ஆண்டியும் அவனிடத்தில் சரண் அடைந்து அவனுக்கு தந்த செல்வத்தையும் பேணிக் காத்தன. ஊர் மக்களுக்கு ஒரு வங்கி போல பணி புரிந்த பல தகவல்களை நாம் கல்வெட்டுகளில் படிக்கலாம். பொதுவாக மன்னர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும் நாடு பிடித்தாலும் அவர்கள் கோயில் சொத்தை ஒன்றும் செய்வதில்லை. எனவே அவை வளர்ந்தன. காய் நிறைந்த மரம் அடி வாங்குவது போல – வடக்கே கஜினியும் தெற்கே மாலிக் கபூரும் இந்த செல்வக் கொழிப்பை சூறையாட வந்தபோது – இதே நிலவறைகள் செல்வத்தை மட்டும் அல்ல பல செப்புத் திருமேனிகளை அவர்கள் கையில் சிக்கி அழியாமல் பாதுகாத்தன. அப்படி பெசிகொண்டிருந்த எங்கள் ஆர்வத்தை பார்த்துவிட்டு , எங்கள் கோயில் நிலவறைக்குள் செல்கிறீர்களா என்று சேரன் மாதேவி கோயில் காவலர் கேட்டவுடன் வெகு நாளைய கனவை நினைவாக்க உடனே தலை ஆட்டினோம்.

இன்னும் இதை பற்றி படிக்க வேண்டும் என்றால் டாக்டர் திரு நாகசாமி அவர்களது தளத்தில்
படிக்கலாம் – Underground Secret Treasuries in Ancient Temples

கடைசியில் வரும் குறிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது .. ...” கடைசியாக காலம் சென்ற திரு T. G. ஆரவாமுதன் , புகழ்பெற்ற நாணயவியல் வல்லுநர், ‘Portrait Sculpture in South India’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், எனக்கு ஒருவர் சொன்னது – தஞ்சை பெரிய கோயில், அவர் சிறு வயதில் நடந்த சம்பவம், கண்ணை கட்டி தன்னை ஒரு நிலவறைக்கு கூட்டிச் சென்றதாகவும், அங்கே மிகவும் அற்புத செப்புத் திருமேனிகள் பல இருந்ததாகவும் கூறினார். பின்னர் பல முறை முயன்றும் அந்த பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். நினவில் அந்த அறைக்கு செல்லும் பாதை இரு கருங்கல் சுவர்களுக்கு நடுவில் இந்தது என்றும் கூறினார். இதை போல பல நிலவறை – சுரங்கங்கள் இருப்பது சாத்தியமே என்றாலும் அவற்றை கண்டுபிடிப்பது தற்செயலாக நடந்தால் தான் சாத்தியம் “

சரி நமது நிலவறைக்கு வருவோம். அது அர்த்த மண்டபத்திலேயே இருந்தது.

அதுவரை இருந்த மின்சாரம் சட்டென போனது. எங்கும் ஒரே இருள், அந்நாட்களில் இப்படி தானே இருந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டே அருகில் சென்றோம்.

ஆலயத்தின் கதவின் பக்கத்தில் – அந்த நாட்களில் தரையில் மற்ற இடத்தில இருக்கும் அதே கல்லைபோன்ற அரைக்கால் கொண்டு மூடி இருப்பார்கள் – இன்று அதை அகற்றிவிட்டு இருப்பு கதவு போடப்பட்டிருந்தது.

அந்த நிலவறையின் அமைப்பு அபாரம். தரையில் இருந்த கதைவை அகற்றியதும் சுமார் ஏழு அடிக்கு பள்ளம். அதற்குள் ஒரு பக்கத்தில், சற்றே உயர்ந்த இடத்தில, அந்நாளில் அங்கும் ஒரு தடுப்பு கல் இருந்திருக்க வேண்டும் ஒரு சிறு சுரங்கம் பக்கவாட்டில் சென்றது. அதனுள் நாங்கள் தவழ்ந்து சென்றோம். எங்கும் கும்மிருட்டு.

பாதை ஒரு இடத்தில முடிந்தது. வலது புறத்தில் காவலர் எவர்ரெடி டார்ச் கொண்டு வழி காட்ட – ஒரு அறை – அந்த அறை – நான்கு அடி உயரம் தான்.

படம் எடுக்க டார்ச் ஆஃப் பண்ண சொல்ல – ஒரு நிமிடம் இதயம் தட தட என்று அடித்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு பழமையான நிலவறைக்குள் இருக்கிறோம் என்ற பூரிப்பு – அதனுள் ஏதாவது கிடைத்ததா என்று கேட்ட பொது – இல்லை சார். நாங்கள் வரும் முன்னரே…

இந்த நிலவறைக்கு மட்டும் ஒரு குரல் இருந்தால் அது என்னென்ன கதைகள் சொல்லுமோ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *