இன்று நாம் மூன்று சிற்பங்கள் பார்க்கப் போகிறோம். இரண்டு தாராசுரத்தில் இருந்து நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் அவர்கள் உபயம் ( தேடித்தந்த குவைத் சதீஷுக்கு நன்றி ) , மற்றும் ஒன்று கிருஷ்ணபுரம் நெல்லை – நண்பர் ஓவியர் திரு A. P ஸ்ரீதர் அவர்கள் கொடுத்து உதவிய அமரர் ஓவியர் சிற்பி அவர்களின் படைப்பும் – எல்லாம் ஒரே கதையை ஒட்டி
அப்படி என்ன கதை – மகாபாரத கதை, ஆனால் ஒரு கிளை கதை ( பல பேர் பல மாதிரி இந்த கதையை கூறுகின்றனர் – அதனால் சிற்பத்தை விளக்க எவ்வளவு தேவையோ அதை மட்டும் இங்கே இடுகிறேன் )
ஒரு சமயம் யுதிஷ்டிரருக்குப் புருஷமிருகத்தின் உதவி தேவைப்பட்டது. ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க ( அதனிடத்தில் பால் வேண்டுமாம் – அது எப்படி , சரி அதை விடுங்க)
பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் இவரிடமிருந்து உதவி (பாலைப்) பெற்று வரவேண்டும். சிறந்த சிவபக்தர் இந்த புருஷாமிருகம்.
மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்கிறார்.
பீமனும் செல்கின்றான். கண்ணன் அவனிடத்தில் 12 கற்கள் ( சில குறிப்புகளில் ருத்ராக்ஷம் அல்லது சிவலிங்கங்களைக் )கொடுக்கின்றார். பீமன் திகைக்கின்றான். இவை எதுக்கு எனக் கேட்க, உனக்குக் காட்டில் என்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு நீ உன் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு கல்லை கீழே போடு எனச் சொல்லி அனுப்புகின்றார். பீமனும் காட்டிற்குச் செல்லுகின்றான். காட்டின் உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகின்றான்.
அங்கே ஒரு வாக்கு வாதம் அல்லது ஒரு போட்டி நடைபெறுகிறது . சரி, தன் எல்லையை விட்டு ( காட்டின் எல்லை ) பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இறை.
பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அவனால் வெகு தூரம் செல்ல முடியவில்லை – அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டது. உடனே கண்ணன் கொடுத்த கல்லை கீழே போடுகிறான். அது ஒரு சிவலிங்கமாக மாறுகிறது ( சிவன் கோயிலாக மாறியது என்று சிலர் )
புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட்டார். பீமன் விடாமல் ஓடுகிறான் – பூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகின்றார்.
இதோ சிற்பம் – தாராசுரம் புடைப்பு சிற்பம். பீமனை துரத்தும் புருஷாமிருகம்
சில மைல் தூரம் போனதும் மீண்டும் பீமன் வெகு அருகில் புருஷாமிருகம் வந்துவிட்டது , மீண்டும் இன்னொரு சிவலிங்கம். இப்படியே 12 கற்கள் (சிவலிங்கங்களையும்) பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியேவந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் வாதாடுகின்றான். தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை என்றும் தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் சொல்லுகின்றான்.
வாக்குவாதம் பலக்க, யுதிஷ்டிரர் வந்துவிடுகின்றார். அவரோட தீர்ப்பு, பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விடுகின்றார்.
இதோ இதுவம் தாராசுரம் சிற்பத்தில் – ஒரு புறம் வாதி ப்ரிதிவாதி இருவரும்,மறுபுறம் வழக்கை கேட்கும் தர்மர் ( அவரை அடுத்து பணிப்பெண் ?)
இந்த கதையை தூண் சிற்பத்தில் க்ரிஷ்ணபுரத்தில் பாருங்கள். இருவரும் சிறு கதை கொண்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ள தயார் ஆகும் காட்சி
இதே தூணை வரைந்த அற்புத ஓவியர் அமரர் சிற்பி அவர்களின் ஓவியம் இதோ.
+++++++++++
கண்டிப்பாக திரு ராஜா தீட்சிதர் அவர்களது தளத்தை சென்று பாருங்கள். அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை நம்பமுடியவில்லை http://www.sphinxofindia.rajadeekshithar.com/