சீயமங்கலம் நோக்கி. ( வெகுவாக பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் , மற்றும் சில கற்பனைகள் )
திண்டிவனம் வந்தவாசி சாலை ….காலை mani 8.30 இருக்கும்
சந்துரு சார் : இது சரியான வழியா? . சார் சீயமங்கலம் இப்படி போனா வருமா .
ஊர் நபர் : பாலத்துல தப்பா திரும்பிட்டீங்க!
டிரைவர்: ஒ அப்படியா , சரி திரும்பி போகிறோம்.
வெங்கடேஷ்: அதோ பாலம். இப்போது எப்படி – நேர போங்க.
சந்துரு சார்: அதோ ஆசி போர்டு.
####: ஒரு நிமிஷம் ஓரமா நிறுத்துப்பா – முட்டுது !!!
ரகோத்தமன்: எடுங்க எடுங்க சீக்கிரம் போவோம்.
விஜய்: சதீஷ், அந்த முறுக்கு பாக்கெட் எங்கே. கார வேர்கடலை – பரவாயில்லே – அத்தையும் கொடுங்க.
நாராயணசுவாமி சார் : ஏதோ கிராமம் போல இருக்கே. வழி சரியா. கேட்டுக்கோ
சந்துரு சார் : எம்மா – குகை கோவில் வழி எப்படி
ஊர் அம்மா : அதுவா , இப்படீகா போய், அப்படி திரும்பி நேர போங்க. யாரையும் கேக்க வேண்டாம்.!!!!!
சந்துரு சார்: அது சரி, அப்படியே போப்பா .
வெங்கடேஷ்: அதோ அங்கே ஒரு மலை தெரியுது. உடு உடு .
சதீஷ்: என்னப்பா ரோடு வேறு பக்கமா போகுது.
நாராயணசுவாமி சார்: இரு இரு , இன்னொரு வாட்டி வழி கேப்போம்.
சந்துரு சார்: ஏம்பா.. குகை
ஊர் ஆசாமி: அதுவா சார், இப்படிகா போய் ….
டிரைவர்: நாங்க அப்படிக்கா தா வந்தோம்.
ஊர் ஆசாமி: இல்ல பா, இப்படி கா பொய், நடுல ஒரு பக்கம் ஒரு பாத போகும், அப்படி உடுங்க
சந்துரு சார்: ஓ சரி சரி
சந்துரு சார்: அப்பாடி, ஒரு வழியா வந்தாச்சு.
விஜய்: என்ன சார், குடவரை கோயில்னு வந்தா பெரிய கோபுரம் , விமானம், வெளி ப்ராஹாரம் எல்லாம் இருக்கு. நாங்கள் மஹேந்திர சீயமங்கலம் குடவரை கோயில், அதில் இருக்கும் முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் பாக்க தான் வந்தோம்.
சந்துரு சார்: அதுவா, உள்ளுக்குளே இருப்பது மஹேந்திர குடவரை – அவர் வைத்த பெயர் அவனிபாஜன பல்லவேஸ்வரம் . அதை சுத்தி பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து பெரிதாக்கி உள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா ? என்ன ஈ காக்கா காணும்.
வெங்கடேஷ்: வாங்க வாங்க.
விஜய்: என்ன வெங்கடேஷ் , தொப்பி எல்லாம் பலமா இருக்கு. எதாவது புதையல் தேட போறீங்களா ?
வெங்கடேஷ்: இல்ல பா, இது எனக்கு மிகவும் ராசியான தொப்பி, இலங்கையில் வாங்கியது. அதோ யாரோ ஒருத்தர் வாரார் !
ஆசி காவலர் : வணக்கம்
சந்துரு சார்: வணக்கம்
விஜய்: சார் நாங்க உள்ளே போகணும். ரொம்ப தொலைவில் இருந்து வந்துருக்கோம்
ஆசி: சார், வெளியிலே பாருங்க. உள்ள போகனும்னா சாமி வரணும். அவர் கிட்டே தான் சாவி இருக்கு.
வேணும் நா இதோ – இந்த ஓட்ட வழியா பாருங்க.
விஜய்:இல்ல சார், உள்ளே போகணும். எங்களுக்கு ########### அவரை தெரியும். ########## தெரியும். வேணும் நா போன் போடட்டுமா ?
ஆசி: சாமி போன் தாரேன் , போட்டு பாருங்க சார். பெரிய பெரிய ஆளுங்க பேரெல்லாம் கரெக்டா சொல்றீங்க!!
விஜய்: கொடுங்க கொடுங்க , ரொம்ப ஆர்வமா வந்துருக்கோம்
ட்ரிங் ட்ரிங் : ஹலோ சாமியா, நாங்க கோயில்ல இருக்கோம். வர முடியுமா
விஜய்: அஞ்சு நிமிஷத்துல வாராராம்.வாங்க அதுக்குள்ளே மத்ததெல்லாம் பாப்போம்
விஜய்: சந்துரு சார், எப்படி மஹேந்திர பல்லவர் இப்படி ஒரு அத்துவான காட்டை செலக்ட் பண்றார்.
சந்துரு சார்: அதுவா, நல்ல கேள்வி. இதுக்கு சரியான பதில் இல்லை. இருந்தாலும், பல குடைவரைகள்
இருக்கும் இடங்களில் சில ஒற்றுமைகள் உண்டு . பெரும்பாலும் சிறு குன்றுகள், அருகில் ஒரு தடாகம் அல்லது அருவி ( நீர் பரப்பு ) இருக்கும் இடங்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா. இங்கே எங்கே சார் நீர் பரப்பு.
சந்துரு சார்: அதோ அங்கே பாருங்க. அந்த பக்கம். இப்போ மழை இல்லை, அதனால் நீர் இல்லை. மேலே ஏறி பாருங்க , நல்லா தெரியும்.
விஜய்: அது என்ன – பாறைக்கு மேலே ஒரு குட்டி கோயில்
சந்துரு சார்: அது ஒரு முருகர் கோயில். பின்னாளில் கட்டப்பட்டது பாத்து ஏறுங்க!!
விஜய்: படி இருக்கே ( பாதி வழி ஏறினப்பறம் தான் வந்தது ஆப்பு – அப்பா என்ன உசரம் )
எல்லோரும் வாங்க – அருமையான வியு
அசோக்: நானும் வாரேன்
சந்துரு சார்: அங்கே மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும் . நடுவில் உள்ள கல் – அப்போ ஜல லிங்கம் போல காட்சி அளிக்கும். இந்த கோயில் இறைவனுக்கு தூணாண்டார் என்ற பெயர் வர அந்த கல்லே காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
விஜய் : வழுக்குது பாத்து பார்த்து இறங்குங்க
காலை நம்ப முடியாது, அப்படியே உக்காந்து ( ஜீன்ஸ் பாண்ட் தானே ) சறுக்கு மரம் மாதிரி வர வேண்டியது தான். என்ன என்னை பாத்து எல்லாரும் சிரிக்கிறிங்களா – இறங்கும் போதுதானே உங்க வீரம் தெரியும்.
குடவரை அமைக்கப்பட்டுள்ள பெரும் பாறையை சுற்றி வந்தோம். அருகில் பல கல்வெட்டுகள், மற்றும் கல் உடைக்க பயன் பட்ட முறைகள் பற்றி பேச நிறைய இருந்தது. நாம் முன்னரே பார்த்த மாதிரி மர ஆப்புகள் அடிக்க துளைகள் பல இடங்களில் பார்த்தோம். அதன் அளவை காட்ட இதோ ஒரு படம். அருகில் இருப்பது இன்ஹேளர் .
சந்துரு சார் : அதோ சாமி டி வி எஸ் 50 வராரு . வாங்க திரும்புவோம் .
ஆடு மேய்ப்பவன்: யார் சார் நீங்க. அதோ பாருங்க – விமானத்துல இடி விழுந்து ஒரு யாழி உடஞ்சு போச்சு. யாரும் சரி செய்ய மாட்டேன்கரங்க. நீங்க எதாவது பண்ணுங்க சார்
அசோக்: அப்படியா , எப்போ இடி விழுந்துச்சு?
சாமி: சார் இதோ திறந்து வுடறேன் வாங்க
சதீஷ் : என்ன ஒரே இருட்டா இருக்கு
சாமி: அதுவா சார், இன்னும் இருட்டா இருக்கும். மூச்சு முட்டும். பாம்பு தொல்லை வேற இருந்துது. ஒரு கீரிப்பிள்ளையை உள்ளே வுட்டுட்டு தான் நான் உள்ளே போவேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வெளி மண்டபத்தை பிரிச்சு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்போ வெளிச்சமும் வருது மழை தண்ணியும் வருது. !!
விஜய்: என்ன சந்துரு சார் – இந்த மண்டபம் தூணும் மஹேந்திர தூண் மாதிரி இல்லையே ( அது என்ன மஹேந்திர தூண் – விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: இன்னும் உள்ளே போங்க
விஜய்: ஆஹா , அதோ மஹேந்திர தூண்

ஆசி: சார், போட்டோ எடுக்கக் கூடாது
விஜய்: மெயின் சாமி போட்டோ எடுக்க மாட்டோம்.தூண், வாயிற் கார்ப்பொன் அப்படி தான் எடுப்போம். ப்ளீஸ் , எங்களுக்கு @@@@@@@@@ தெரியும் !!!
ஆசி: ம்ம்ம்ம்ம்ம்
சதீஷ்: விஜய், இங்கே இன்னும் பல சிற்பங்கள். இடுக்கில் ஒரு மகர தோரணம் , அதில் ஒரு கணம்
விஜய்: ஒரு நிமிஷம் , இந்த வலது புறத்து வாயிற்காப்போனின் தலை பாருங்கள் – கொம்பு போல உள்ளது. ( என்ன அது – விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: தூணில் உள்ள வேலைப்பாட்டை பாருங்கள்.
விஜய்: அருமை – இரண்டு கம்பீர சிங்கங்கள். இங்கே தூணின் பொதிகையில் டிசைன் போட ஆரம்பித்துள்ளனர் ( அப்போ டிசைன் இல்லாத தூண் – உண்டு உண்டு – இங்கே இல்லை, வேறு இடத்தில )
நாராயணசுவாமி சார்: இங்கே இரு பக்கமும் பாருங்க.
விஜய்: சதீஷ், நீங்க சுந்தர் சார் கிட்டே கடன் வாங்கின மஹேந்திர குடைவரைகள் புக்கில் பாருங்க . யார் இது.
சதீஷ் : அவங்க அமலையர் சிற்ப்பங்கள்.
விஜய் ; ஒ அப்படி என்றால் என்ன, பார்க்கணும். இதோ பாருங்க பூ கூடையுடன் ஒரு தோழி ….
ரகோத்தமன்: சந்துரு சார், இதோ தூணில் ஒரு கல்வெட்டு இருக்கே. தமிழ் மாதிரி இல்லையே.
சந்துரு சார்: அது க்ரந்தம் . மஹேந்திர பல்லவர் கல்வெட்டு
விஜய்: ஒ , அப்படியா, சதீஷ் பூகில் குறிப்பு இருக்குமே பாருங்க
சதீஷ்: இருக்கு – இதோ படிக்கிறேன்.
அவனி பாஜன பல்லவேஷ்வரம் எனும் இக்கோயில் இலலிதாங்குரனால்
நற்செயல்கள் எனும் நகைகளை உள்ளடக்கிய நகைபெட்டியென எடுக்கப்பட்டது
விஜய்: அற்புதம், ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் ஆகியும் தன் புகழ் மட்டது இருக்கும் பல்லவர் …..வாழ்க
ரகோத்தமன்: தூணுக்கு இந்த பக்கம் வேறு கல்வெட்டு இருக்கு. ஆனால் வேறு எழுத்து.
சதீஷ்: அது பின்னாளைய தந்தி வர்மர் மற்றும் நந்தி வர்மர் – தமிழ் கல்வெட்டு.
சந்துரு சார் : இதோ நடராஜர் சிற்பம். தென்னகத்தில் கல்லில் வடிக்கப்பட்ட முதல் முதல் நடராஜர் வடிவம் இதுவே – இதோ இந்த தூணில் உள்ளது. சாமி கொஞ்சம் ஆர்த்தி காட்டுங்க. அந்த பக்கம் ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி .
அசோக்: ஒரு நிமிஷம் பொறுங்க, இதோ நான் வாறன் கேமரா வுடன்

ஆஹா… இருளை போக்கி ஆடல் வல்லான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் பார்க்கும் பாக்கியம். …
என்ன அற்புத புடைப்பு சிற்பம். சிற்பம் மற்றும் தூண்கள், மகர தோரணம் – அனைத்தும் அடுத்த பதிவில் அலசுவோம்.
படங்கள் : குழு நண்பர்கள், மற்றும் திரு சுவாமிநாதன் மற்றும் திரு சந்துரு அவர்களது முதல் பயணம் . நன்றி திரு சுந்தர் சார்.
ரகோத்தமன் , சதீஷ் ,வெங்கடேஷ் , சந்துரு சார் , அசோக் மற்றும் உங்கள் விஜய்
Ref: Sri K.R. Srinivasan – Cave temples of the Pallavas, Dr KKN’s மஹேந்திர குடைவரைகள்