கிளிகளின் ஏமாற்று வித்தை – திருக்குறுங்குடி

கோயில் தூண்களிலும், வாயில் கோபுரத்திலும் சிற்பங்களை செதுக்கும் பொது சிற்பிகளுக்கு ஒரு அதீத நகைச்சுவை உணர்வு வந்துவிடும் போல. ஆலயம் உட்புறத்தில் செதுக்கும்போது சில பல கோட்பாடுகளுக்குள் அடங்கி விட்ட அவர்களது கற்பனைத் திறன் வெளியில் வந்தவுடன் சிறகு முளைத்து சுதந்திரமாக பறக்கும் போது அவர்களது கலையின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கிறது. இப்படி ஒரு சிற்பக் கோர்வையை நாங்கள் திருக்குறுங்குடி ஆலயத்தின் கோபுரத்தில் பார்த்தோம்.

நேரடியாக சிற்பத்துக்கு போவதற்கு முன்னர் சமீப காலமாக, ’ஒன்றுபட்டால் உண்டு வாழு’ என்று நாம் சிறுவயதில் எருமை கூட்டம், அல்லது வயதான அப்பா சிறு குச்சிகளை ஒரு கட்டாக கட்டி மகன்களை உடைக்கச் சொல்லும் கதைகளில் கேட்ட கருவை கொண்டு அமைக்கப்பட்ட இந்த ஓவியம் பலரும் பார்த்து இருப்பீர்கள்.

சரி சிற்பம் பார்க்க செல்வோம். இவை முதல் தளத்தில் இருப்பதாலும், ஆலய கோபுரத்தின் யானை நுழையும் அளவு வாயிலை மனதில் கொண்டும், இவை இருக்கும் இடம் – பொதுவாக பலரும் பார்க்க முடியாத இடம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.

முதல் இரு சிற்ப்பங்கள் – இளம் பெண்கள் அந்த நாட்களில் கிளிகளை செல்ல பிராணியாக வைத்துக்கொள்வது வழக்கம் போல உள்ளது.

இப்படி ஒவ்வொரு பெண்ணும் ஒரு கிளியை கேட்டால் கிளிக்கு எங்கே போவது ?

காட்டுக்கு சென்று வேட்டையாடி தானே பிடிக்க வேண்டும் ! இது மூன்று வேடர்கள் கிளிகளை வேட்டையாடும் சிற்பம். சிற்பி ஒவ்வோருவர் கையிலும் வெவ்வேறு ஆயுதங்களை கொடுத்து இருப்பதை பாருங்கள். முதலில் இருப்பவன் கையில் உண்டிகோல் உள்ளது, ஒருவன் கையில் வில் – நடுவில் இருப்பவன் ஒரு கோலிகுண்டை லாவகமாக அடிக்கும் பாணி மிக அருமை. !!

இப்படி வித விதமான ஆயுதங்கள் கொண்டு தங்களை வேட்டையாடும் வேடர்களிடத்தில் இருந்த தப்பிக்க கிளிகள் என்ன செய்கின்றன ?

என்ன ஒரு ஏமாற்று வித்தை ? யானையை போலவும் குதிரையை போலவும் அவை மாறுவது போல கற்பனை செய்து செதுக்கிய கலைஞனின் கைத்திறன் அபாரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *