ஒன்றா , இரண்டா …புலித்தொப்பை நண்பர்களின் லூட்டி – திருமால்புரம்

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் – மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை – அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி – நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி – அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் – பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் – அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் – வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 – 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

அதோ அங்கே, இருப்பது அவரா ?

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.


இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *