மக்களே, இன்று ஒரு புதிய பதிவு – தனது பல்வேறு ஆற்றல்களால் அசத்தும் தோழி திருமதி பர்வத வர்தினி முரளி கிருஷ்ணன் அவர்கள் இன்று முதல் முறையாக நமது தளத்தில் ஒரு பதிவை எழுதுகிறார். சமீப காலமாக அவர் ஒரு தளம் நிறுவி அபாரமாக எழுதி வருகிறார். பொன்னியின் செல்வி சென்ற பெயரில் இயங்கும் அந்த தளத்தைக் கண்ட பின்னரே இந்த பொன்னியின் செல்வியை திருமால்புரம் ஆலயத்தில் கண்ட இரு அற்புத கண்ணன் வடிவங்களுக்கு வர்ணனை எழுத அழைத்தேன். அவரும் உடனே பணியை ஏற்று அழகாக செய்துள்ளார். இதோ பதிவு …
நான் ஒரு பட்டயக் கணக்கர் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்). குவைத்தில் வசித்து வருகிறேன். தற்போது முழுநேர இல்லத்தரசி. அமரர் கல்கி அவர்களின் அமரகாவியமான பொன்னியின் செல்வனைப் படித்து, அந்த ஈடுபாட்டில் இணையத்தில் தேட, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை என்ற யாஹூ குழுமம் பற்றி அறிந்து அதில் இணைந்து கொண்டேன். அந்தக் குழுமத்தின் மூலம் பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அவ்வாறே “கல்லிலே கலைவண்ணம் கண்டோம்” எனும் இந்த வலைதளமும் திரு. விஜய் அவர்களும் அறிமுகமானார்கள். சிற்பங்களைப் பற்றி பல தகவல்களை எளிமையான முறையில் எடுத்துக்கூறும் இந்த வலைதளத்தைப் பற்றி அறிந்துகொண்டதிலிருந்து நான் இங்கு வாடிக்கையான வாசகி.
நமது நண்பர் திரு. விஜய் அவர்கள் ஒரு சிற்பத்தின் புகைப்படத்தை அனுப்பி இதைப் பற்றி ஒரு கெஸ்ட் போஸ்ட் செய்கிறீர்களா என்று கேட்டார். என் மனதினுள் தயக்கம். ஐயா, சிற்பத்தைப் பற்றி நீங்கள் எழுதினால் நன்றாயிருக்கும். எனக்கொன்றும் தெரியாதே. நான் என்ன எழுத என்று கேட்டேன். இல்லை, நீங்கள் அந்தப் சிற்பத்தின் படத்தைப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள் என்றார். சரி ஆகட்டும் என்றேன். அந்த சிற்பத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பரம்பொருளாகிய கண்ணன் குழந்தையாக காட்சி தரும் சிற்பம் யாருக்குத் தான் பிடிக்காது. எனவே, கண்ணனின் திருவுளமாகவே இதை ஏற்றுக் கொண்டு, இப்பதிவினை எழுதுகிறேன்.
நான் சொல்லப் போவதென்னமோ கதை தான். அதுவும் நாம் அனைவரும் அறிந்த கதை. ஆம், அந்த சிற்பம் சொல்லும் கதை.
கண்ணன் குறும்பின் மொத்த உருவம். தன் வீட்டில் பானைகளிலும் உறியிலும் அத்தனை வெண்ணெய் இருக்க, கோகுலத்தில் இருக்கும் பிறரின் வீட்டிற்கு சென்று வெண்ணெய் உண்ட கண்ணன். இதைக் கண்டு கோகுலத்துப் பெண்கள் எல்லாம் யசோதையிடம் கண்ணனை குறை கூறி முறையிட, யசோதைக்கு கோபம் வருகிறது. அவள் கோபமாய் இருப்பதை அறிந்து, கண்ணன் அவள் எதிரே வர மறுக்கிறான். உடனே யசோதை, மிக ஆசையாக கண்ணனை அழைத்து, உனக்கு பாலூட்டுகிறேன் வா என்று அழைக்கிறாள். அவன் அருகில் வந்ததும், சட்டென்று ஒரு தாம்பு கயிறை எடுத்து அவனை ஒரு பெரிய மர உரலோடு கட்டி விடுகிறாள். வயிற்றில் தாம்புக் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் தாமோதரன் (தாம்பு + உதரன்) என்று அழைக்கப்படுகிறான்.
அதிரும் கடல்நிற வண்ணனைஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து
பதரப்படாமே பழந்தாம் பாலார்த்த
உதரம் இருந்தவாகாணீரே ஒளிவளையீர் வந்து காணீரே.
(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 9)
அலைகடல் ஆர்ப்பரிப்பதைப் போன்று மிகவும் குறும்பு செய்துகொண்டிருந்த அலைகடல் வண்ண தேகம் கொண்ட கண்ணனை, இனிமையான தாய்ப்பால் கொடுப்பதாக ஏமாற்றித் தன்னருகே அழைத்த யசோதை அன்னை, அவனை அருகிலிருந்த ஒரு பழைய கயிற்றால் கட்டி வைத்தாள். கண்ணனின் தாம்பு கயிற்றினால் ஏற்பட்ட தழும்புடன் கூடிய வயிற்றழகை வந்து பாருங்கள். ஒளிவீசும் வளையல்கள் அணிந்துள்ள பெண்களே, தழும்புடன் கூடிய அழகிய வயிற்றை வந்து பாருங்கள்!
குழந்தைகள் என்றும் விஷமம் செய்வதும் பெற்றோர்கள் கண்டிப்பதும் தொன்று தொட்டு இருப்பவை போல !! இதோ சிற்பம்
அத்துடன் முடியவில்லை கண்ணனின் லீலை. யசோதை இவ்வாறு கண்ணனை உரலில் கட்டிவிட்டு வீட்டினுள் சென்று விடுகிறாள். சிறிது நேரம் சும்மா இருந்தான் கண்ணன். பிறகு அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உரலோடு சேர்த்து இழுத்துக் கொண்டே வாசல் வரை வந்தான். இந்த கட்டிலிருந்து வெளிவர ஒரு உபாயம் செய்தான். வீட்டு வாசலில் இருந்த இரு மருத மரங்களைக் கண்டான். ஆகா இந்த மரங்களின் இடையில் நான் புகுந்து வெளிவந்தால், உரல் வெளிவர முடியாமல் கயிறு தானே அறுந்து விடும் என்று எண்ணினான். எனவே, உரலை இழுத்துக் கொண்டு இரு மரங்களுக்கு இடையில் புகுந்தான். தன் பலம் கொண்ட மட்டும் உரலை இழுத்தான். ஆனால், என்ன அதிசயம். அவனது பலத்துக்குக் கட்டுப்பட்டு அந்த இரு மரங்களும் வீழ்ந்தன. வீழ்ந்த்து மட்டுமின்றி இரு தேவ குமாரர்கள் அந்த மரங்களிலிருந்து எழுந்தனர்.
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள். பெருஞ்செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப் பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர். அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.
இவையனைத்தையும் அறிந்தே கண்ணன் அந்த மருத மரங்களை வீழ்த்தி, அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தான். குபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்துஅங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்பு இருந்தவாகாணீரே சேயிழையீர் வந்துகாணீரே
(பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து இரண்டாம் திருமொழி சீதக்கடல் – பாடல் 10)
தான் செய்த குறும்புத்தனத்திற்காக யசோதையால் மிகப் பெரிய உரலில் கட்டப்பட்டு பின் அந்த உரலை இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களை முறித்துவிட்ட இந்த பாலகனின் திருமார்பையும் திருமார்பில் மின்னுகின்ற திருமகள், கௌஸ்துபம் எனும் இரத்தினமணி, திருத்துழாய் மாலை ஆகியவற்றையும் வந்து பாருங்கள். செம்மையுடைய அணிகலன்கள் அணிந்திருப்பவரே, வந்து பாருங்கள்.
மேலும், அருணகிரிநாதர் தனது திருப்புகழில்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
பரமபர நண்ப ரன்பின் மருகோனே
என்று பாடுகிறார்.
உரலுடன் கட்டப்பட்டு, அதனை இழுத்து வரும் கண்ணனை பாருங்கள்.
இம்மாதிரி நுண்ணிய வேலைபாடு மிக்க சிற்ப்பத்தை தேடுவதிலும் ஒரு ஆனந்தம் உண்டு
எவ்வளவு சிறியது பாருங்கள். அதவும் மரங்களின் அடியில் முகங்கள் – மருத மரங்களாய் நின்ற நளகூபனுக்கும் மணிக்ரீவனுக்கும் சாப விமோசனம் பெறுகிறார்கள் …அற்புதம்
. மிகச் சிறிய சிற்பத்திற்குள் எத்தகைய தெய்வீக கதைகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!