நான் இத்தனை காலம் காத்துவந்த பொக்கிஷம்

நாம் இது போன்ற சிதைந்த ஆலயங்கள் பல பார்த்துள்ளோம். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் இப்படி தடுக்கி விழுந்தால் இரண்டு இருப்பதால் இவற்றின் மதிப்பை நாம் உணருவதில்லை. இதுவே வெளிநாடாக இருந்தால் தங்கள் பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடாக தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். எனினும், இந்த புள்ளலூர் விமானம் மட்டும் ஏனோ கண்ணையும் சிந்தனையும் விட்டு விலக மறுத்தது.

சிதலமடைந்தும் கம்பீரமாக நிற்கும் விமானம் – புள்ளலூர்

சில நொடிகளே அங்கு கழித்தோம் – மாலை நேரம், வெளிச்சம் குறைந்துக்கொண்டு இருந்தது, மதிய உணவு சாப்பிடவில்லை !! அதற்கும் மேலாக முந்தைய இடத்தில வழியில் ஓடிய பாம்பு, அத்துடன் விமானம் இருந்த நிலைமை என்று பல காரணங்கள். இருந்தும் மனம் எதோ அடித்துக்கொண்டது. வந்த பின்னரும் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் அந்த கோயலின் நிலையை பற்றி சொல்லி தீர்த்தேன். அப்படி சொல்வதை கேட்டு நண்பர் திரு சந்திரசேகரன் ரீச் பௌண்டேஷன் உடனே சென்று பார்க்கிறேன் என்று உறுதி கூறினார். மனதில் அங்கு விமானத்தில் உள்ள சுதை உருவங்களின் நல்ல படங்கள் கிடைத்தால் இந்த கோயிலின் காலத்தை கணிக்க உதவும் என்பதே எனது நோக்கம்.


சந்திரா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று
திரு தியாக சத்யமூர்த்தி அவர்களையும் அழைத்துச் சென்றார். மேலே என்ன நடந்தது ?

மாலை எனக்கு சும்மார் நாலு மணி அளவில் குறுஞ்செய்தி
ஷங்கர் : ” ரீச் உள்ளே ஓவியங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்”
நான் . ” எந்தக் கோயில் ?”
ஷங்கர் : புள்ளலூர் !
நான் : அங்கே எந்த கோயில்
ஷங்கர் : செங்கல் இடிந்த கோயில்.
நான் : இதோ அழைக்கிறேன் ….

சரி, இதை நாங்கள் எப்படி கவனிக்காமல் விட்டோம் ? நீங்களே பாருங்கள்.

இந்த சுவரில் தான் ஓவியங்கள் உள்ளன என்றால் நம்புவீர்களா ?

ஆமாம், இதில் தான் நான்கு உருவங்கள் உள்ளன. அருமையான அணிகலன்கள், மகுடங்கள் – ஏன் உற்றுப் பாருங்கள் கண் , புருவம் என்று அனைத்தும் மெதுவாக தெரிய வரும். யார் இவர்கள் ?

இதை விட பெரிய கேள்வி – இந்த ஆலயத்தின் காலம் என்ன. உள்ளே இருக்கும் இந்த ஓவியங்களின் காலம் என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *