ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:
Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் – கம்போடியா – அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.
இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.
கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.
(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)
குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.
இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.
மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது – சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.
வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.