சிற்பங்களுக்கென உருவாக்கப் பட்ட சிறப்பு வலைத்தளம் இது, மேலும் பல்லவ சிற்பங்களின் வசீகரத்தால் மயங்கிக் கிடக்கும் எனக்கு இந்த பதிவை உருவாக்குவது சற்றே சிரமமெனினும் நல்லதொரு பதிவை உங்களுக்கு அளிக்கும் மகிழ்ச்சியில் தொடர்கிறேன்.
ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்கிறது என்றால் நம் மனம் அதிலேயே லயித்து விடும், மீண்டும் மீண்டும் மனம் அதையே நாடிச் செல்லும். அது போல் பல்லவ சிற்பங்களில் மனதை செலுத்தி சிட்டுக் குருவியாய் சிறகடித்துக் கொண்டிருந்த என்னை, பல்லவர்களுக்கு முந்திய சிற்பங்களின் புகைப்படத்தை காட்டியும் தன் கேள்விக் கணைகளாலும் கட்டிப் போட்டுவிட்டார் தோழி கேத்தி. எனினும் நான் எனது மகேந்திர நாமத்தை விடவில்லை. அண்மையில் ஒரு தேடலில் – என்னுடைய மயக்கத்தால் சிற்பக்கலையின் ஈடு இல்லாத நாயகன் மகேந்திரபல்லவன்தான் என்றிருந்த நான் தகர்ந்து போனேன், டாக்டர். முகமது தாஜுதீன் கான் அவர்களின் ஆச்சர்யமூட்டும் உண்டவல்லி குடைவரைகளின் புகைப் படங்களை பார்த்தபொழுது தான் ….
(உண்டவல்லிக் குடைவரைகள் விஜயவாடாவிற்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், குண்டூரிலிருந்து வடமேற்கே 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரைகள் ஹைதராபாதிலிருந்து 220௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நன்றி விக்கி)
இந்தப் படங்களை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தவர் “விசித்திரசித்தன்” நாவலை எழுதிய திரு. திவாகர் அவர்கள்தான், அவரிடம் இதைப்பற்றி உரையாடிய போது இரண்டு ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தன. ஒன்று இந்த குடைவரைகளின் காலம் 4 முதல் 6 ஆம் நுற்றாண்டு (கி.பி.), இது விஷ்னுகுன்டின மன்னர்கள் காலத்தை சார்ந்தது. நிச்சயமாய் இது மகேந்திரவர்மரின் முதல் குடைவரையான மண்டகப்பட்டிற்கு முந்தியதுதான். இரண்டாவது ஆச்சர்யம், மகேந்திரவர்மர் தன்னுடைய வாழ்நாளின் முற்பகுதியை இங்கே செலவிட்டு இருக்கவேண்டுமென்பது. மேலும் சிம்ம விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவர் விஷ்னுகுண்டின் வம்சத்தை சார்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மற்ற விஷயங்களைப பற்றி அலசி ஆராய்வதற்கு முன், இரண்டு சிற்பக் கலைகளையும் சற்று பொருத்திப் பார்த்திடுவோம். உங்களுக்கு அதிக சிரமமில்லாமல் ஒரே ஒரு துவார பாலகரையும் ஒரே ஒரு தூணையும் மட்டும் முதலில் பார்க்கலாம்.
தூணின் வடிவமைப்பு, அதில் உள்ள வரிகள், நேர்த்தி, சிம்மத்தின் வடிவமைப்பு ஆகியவற்றோடு துவார பாலகரின் தோற்றம், நிற்கும் அழகு, கதை ஆயுதம், உடை , அணிகலன் , இடுப்பு வளைவுகள், இடுப்பின் மேல கையை ஊன்றி வைத்திருக்கும் முறை ஆகியவற்றையும் கவனிக்கவும்.
என்ன பார்த்தாயிற்றா, ஒருவேளை மகேந்திரவர்மரால்தான் இவைகள் செதுக்கப்பட்டனவோ என்ற எண்ணம் எழுகிறதல்லவா! ஆனால் என்ன செய்வது இவற்றின் காலம் குறைந்தது ஐம்பது முதல் நூறு ஆண்டுகள் நம் விசித்திரசித்தருக்கு முற்பட்டதாயிற்றே.
இதுவரை மகேந்திரவர்மர்தான் குடைவரை சிற்பங்களின் முன்னோடி என்றல்லவா நினைத்திருந்தோம், இதோ திரு. நாகசாமி தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளதையும் பார்த்துவிடுவோம். ( மண்டகப்பட்டு புகழ் பெற்ற மகேந்திர கல்வெட்டு )
http://www.tamilartsacademy.com/books/mamallai/new-light.xml
கல்வெட்டினை படித்துப்பார்க்கலாம் ” விசித்திரசித்தனால் நிர்மாணிக்கப் பட்ட இந்த ஆலயம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்க்கு அர்ப்பணிக்கப்பட்டது, இதில் செங்கலோ, கலவையோ, மரமோ, உலோகமோ உபயோகப்படுத்தப்படவில்லை. இதுதான் தென்னிந்தியாவில் முதன்முதலாக வெட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை, இதற்குப்பின் வந்த கல்வெட்டுகளிலும் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. பட்டப்பெயர் வைத்துக்கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் , அப்படியெனில் அவர் தனக்கு “அத்யகுகயதநகாரி” அதாவது முதல் குடைவரையை வெட்டியவர் என்று பெயர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இதுவரை அவ்வாறு ஒரு பட்டப் பெயரை நாம் எங்கும் பார்க்கவில்லை.
மகேந்திரரால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு பண்டைய ஆவணங்களிலும், அதாவது கல்வெட்டுகளிலோ அல்லது செப்பு பட்டயங்களிலோ, அவர்தான் முதலில் குடைவரைகளை தோற்றுவித்தார் என்று குறிப்பிடப்படவில்லை.”
எது வேண்டுமானாகிலும் இருந்துவிட்டு போகட்டும், ஒன்று நிச்சயம் இந்த மண்டகப்பட்டு குடவரை தான் பல்லவர்களின் முதல் குடைவரை. ( சிலர் மண்டகப்பட்டு குடவரை மற்றும் தூண்களின் வேலைப்பாட்டையும் அதன் வாயிற் காப்போனின் வேலைபாட்டையும் வைத்து தூண்களை விட அவர்களின் வேலைப்பாடு முதிர்ந்த நிலை என்று சொல்வது உண்டு. ஒரு வேலை அவை பின்னர் வெட்டப் பட்டதாகவும் இருக்கலாம்)
அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பார்த்தால், மண்டகப்பட்டு குடைவரைக்கும் உண்டவல்லிக் குடைவரைக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். தமிழகத்தில் குடைவரைகளுக்கும், சிற்பக் கலைக்கும், ஆலய கட்டுமானத்திற்குமான பொற்காலத்திற்கு வித்திட்ட மகேந்திரவர்மரின் கலைத்தாகம் உண்டவல்லியில் துவங்கியதா ?
மேலே கண்ட ஒற்றுமைகளை எதைச்சையாக இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைத்தால், மேலும் சில உண்டவல்லிக்கும் மகேந்திர குடைவரைகளில் உள்ள சிற்ப ஒற்றுமைகள் இதோ. தூணின் வடிவம், அலங்கார பூ வடிவம், கம்பீர சிங்கம் ….
இப்போது என்ன சொல்கிறீர்கள் ?
இதே போல் மற்றுமொரு மனதை கொள்ளை கொள்ளும் குடைவரை ” பைரவகொண்டா”, இதை விரைவில் மற்றுமொரு பதிவில் காண்போம்.