பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *