தக்ஷன் தலையை கொய்த ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது – வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து – அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) – நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன – ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .


முதல் தலை கொய்தல் – முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) – அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

கீழே – முக்கிய காட்சி – தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் – அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட – என்ன ஒரு அருமையான படைப்பு – முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் – அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் – அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் – ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

சரி – அடுத்த பாகம் – மூன்று ரிஷிகள் – மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் – அதுவும் அந்த ஈசனின் வடிவம் – மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.


ஈசனும் மனம் இறங்க – கடைசி காட்சி – மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் – மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *