திலோத்தமை – மகேசனையே மயக்கிய அழகு

இன்றைக்கு நாம் ஒரு மிக சுவாரசியமான கதை , அதனை ஒட்டிய ஒரு அற்புத சிற்பத்தை பார்க்க போகிறோம்.( கம்போடியா சிற்பம் இப்போது பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளது )

முதலில் கதை – இல்லை இல்லை கதைக்குள் ஒரு கதை .அதிரூபசுந்தரிகள் என்றாலே நமக்கு ரம்பை, ஊர்வசி, மேனகை நினைவுக்கு வருவார்கள். அவர்களுடன் தில்லோதமை – ஆனால் இந்த சுந்தரியின் கதை வேறு .

இதனைபஞ்ச பாண்டவருக்கு மூத்தவரான தர்மராஜனுக்கு நாரதர் மகாபாரதத்தில் விளக்குகிறார்: காட்டில் அக்ஞானவாசத்தில் இருக்கும் பஞ்ச பாண்டவர், பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் தனது மகள் திரௌபதிக்கு தக்க மணாளனை தேட வைக்கும் சுயம்வரத்தை பற்றி அறிந்து – அதில் பங்கேற்கின்றான் விஜயன். திரெளபதியையும் கைப்பிடிக்கின்றான்

தன் தாயிடம் தருமன், வெளியில் இருந்து, தாங்கள் பிட்சை கொண்டு வந்ததாக கூற, அவளும் சகோதரர்கள் அனைவரும் முறையே அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கூறுகிறாள்.

தருமருக்கு தர்மசங்கடம் – அப்போது அவ்வழியே வரும் நாரதர் நிலைமையை புரிந்து அறிவுரை கூறுகிறார். அழகிய பெண்ணால் கெட்டு அழிந்த அசுரர்கள் – சுண்டா மற்றும் உபசுண்டா எனும் இரு அசுரர்களின் கதையை சொல்கிறார்.

இருவரும் நிசும்பனின் புதல்வர்கள் ( நிசும்பன் ஹிரண்யகசிபுவின் வம்சத்தில் தோன்றிய அரக்கன் ) – இணை பிரியாதவர்கள் , சகோதர பாசம் மிகுந்தவர்கள் – தங்கள் அனைத்து உடமைகளையும் தங்களுக்குள் பங்கிட்டு வாழ்ந்தவர்கள். பெரும் வேள்வி நடத்தி, தாங்கள் இருக்கும் விந்திய மலையையே புகைக்க வைத்தனர். தேவர்கள் அவர்கள் தவத்தை கலைக்க பல முறை முயன்றும் முடியவில்லை . முடிவில் பிரம்மன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் சாகா வரம் கேட்க – முடியாது என்றார் பிரம்மன்.

பிறகு இருவரும் தங்கள் சகோதர பாசத்தில் நம்பிக்கை வைத்து – தங்கள் இருவர் கையால் மட்டுமே தங்கள் முடிவு நிகழும் என்ற வரம் பெற்றனர்.

இருவரும் வரத்தின் பலத்தால் பூலோகத்தையும் , இந்திர லோகத்தையும் வென்றனர். இவர்களை தடுக்க பிரம்மன் விஸ்வகர்மாவை அழைத்து – மூவுலகிலும் இல்லாத ஒரு அழகிய பெண்ணை உருவாக்க கட்டளை இட்டார் . விஸ்வகர்மன் உலகில் உள்ள அனைத்து அற்புத நுண்ணிய அணுக்களை கொண்டு திலோத்தமையை உருவாக்கினான். (தில் – எள் போன்ற நுண்ணிய அணுக்கள் – உத்தம – மிகவும் மேலான )

பிரம்மன் அவளை சுண்டா மற்றும் உபசுண்டாவை மயக்கி இருவருக்குள் சண்டை வரச் செய்ய கட்டளை இட்டார். தில்லோதமையும் அவ்வாறே அங்கு செல்லும் முன் ஈசனையும் இந்திரனையும் வணங்கி பிரதக்ஷணம் செய்தாள். அப்போது அவள் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்த ஈசன், அவள் சுற்றிவரும்போது கூட அவளை பார்க்க நான்கு தலைகளை கொண்டதாகவும், இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றதாகவும் கேள்வி.
(இந்திரனின் ஆயிரம் கண்களுக்கு வேறு பல கதைகளும் உண்டு !!)

நினைத்தது போலவே, திலோத்தமையின் அழகில் மயங்கி இரு இணை பிரியா சகோதரர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டு மாண்டனர்.

இதனால் நாரதர் தர்மனுக்கு பெண் விவகாரங்களில் மிக ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும் என்றும் அண்ணன் தம்பி உறவு அவளால் முறிய வாய்ப்பு உண்டு என்று கூறி, அவர்களுக்கு …….அது வேற கதை . நாம் இன்றைக்கு இதனுடன் நிறுத்துவோம்.

இப்போது சிற்பம். கம்போடியா நாட்டில் இருந்து தற்போது பிரெஞ்சு நாட்டு குய்மேட் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத சிற்பம். சுண்டா மற்றும் உபசுண்டா திலோத்தமையை நடுவில் வைத்து சண்டையிடும் காட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *