கடந்த மூன்று ஆண்டுகளாக் நான் பல சிறந்த நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினை இணையம் வழிவகுத்தது . அவர்களுள் அன்பர்கள் பலரும் தந்த ஊக்குவிப்பாலும், உதவிகளாலும் மட்டுமே என்னால் இந்த தளத்தை நிறுவலாம் என்ற எண்ணம் எழுந்தது.
அவர்களுள் நான் சந்தித்த ஆர்வலர் – திரு சந்திரா அவர்கள். எப்போதும் காலில் சக்கரம் இயற்கையாகவே இருப்பது போல சுறுசுறுப்பாகச் சுற்றி தென்னகம் முழுவதும் உள்ள சிதைந்த கோவில்களை பட்டியல் இட்டு அவற்றை எவ்வாறு செவ்வனே சீரமைக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்- அதனுடன் மட்டும் நில்லாமல் – அந்த பணிகளில் தன்னை ஆழ்த்திக்கொண்டிருக்கும் இவர், இன்று நமக்கு ஒரு அற்புத சிற்பத்தைத் தந்துள்ளார்.
முன்பு நாம் தஞ்சை பெரிய கோவில் தூணில் இருக்கும் புலிக்கால் முனிவர் சிற்பம் மற்றும் அவரது கதையை பார்த்தோம். இன்று மீண்டும் அவர் தான் – எனினும் இந்த சிற்பத்தை பாருங்கள் – வயலூரை அடுத்த ஒரு சிறிய ஊரில் உள்ள மதவிளாகம் கோவில் சிற்பம்.
சிற்பியின் அற்புத சிந்தனை வியக்கவைக்கிறது- புலிக்காலை வைத்துக்கொண்டு யோக நித்திரையில் இருக்கும் ஒரு முனிவரை அற்புதமாக சித்தரித்துள்ளான் சிற்பி – முனிவர் என்பதால் ஜடா முடி, கொண்டை, ருத்ராக்ஷம் , கைகளின் யோக முத்திரைகள் – ஆனால், சிற்பத்தின் சிறப்பு – வெறும் புலி காலை மட்டும் காட்டாமல் அமர்ந்திருக்கும் ஒரு புலியின் பாவனையை கல்லில் செதுக்கிஇருக்கும் அவன் திறமை – அருமை.
27502754
மதவிளாகம் கோவில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. மேல் சுவர் சரியாக செப்பனிடாததால் மழை நீர் உள்ளே வருகிறது. கொடிமரத்தின் தகடுகள் அனைத்தும் இழந்து மொட்டையாக அதி மரம் மட்டும் தான் உள்ளது.
ஒரு அற்புத சிற்பத்தை நம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி சந்திரா !!