புராணங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஹனுமான் மற்றும் கருடன். அமர்சித்ராகதா புத்தகம் அனைத்தையும் அழுது அடம் பிடித்து அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கி வரச் செய்வேன்.
அதில் வரும் கதைகள் மற்றும் படங்கள், மிக அருமையாக அப்படியே மனதில் பதியும். அப்படி பதிந்த ஒரு கதை, அண்மைய நண்பர் திரு கிரிதரன் அவர்கள் (நிறைய அற்புத படங்களை நமக்கு அனுப்பி உள்ளார் – விரைவில் அவற்றை பார்ப்போம்) திருக்குறுங்குடி சிற்பம் ஒன்றை தந்தார். பார்த்தவுடன் நினைவுக்கு வந்த கதை.
கருடனின் கதை – இந்தியாவில் மட்டும் அல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்னாம் , கம்போடியா என்று எங்கும் பிரபலமான ஒன்று.
3190319731993203321632373243
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால் காப்பவன் விநதை சிறுவன் கருடன்
மகாபாரதத்தில் அவன் பிறந்த கதை மிக அழகாக வர்ணிக்க படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து – ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை – அவசரத்தில் தன் தமக்கையின் குட்டிகள் கண்ட ஆர்வத்தில் அவள் செய்த தவறு – உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது – அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான் .( அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )
அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை. அந்தப் போட்டி என்ன ? இந்திரனின் வெள்ளைக் குதிரையான உச்சைர்வத்தின் ( பாற்கடலை கடையும் பொது வந்தது அது – அதனுடன் வந்ததே கௌஸ்துபம் – பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி ) வாலின் நிறம் என்ன என்பதே போட்டி. விநதை தூய வெள்ளை நிறக் குதிரையான உச்சைர்வத்தின் வாலின் நிறம் வெள்ளை என்று கூற, கத்ரு கறுப்பு என்று கூறினாள். பின் போட்டி நடைபெற்ற போது தந்திரமாக கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து உச்சைர்வத்தின் வாலை சுற்றிக் கொள்ளக் கூறுகிறாள். எனவே அவர்கள் பார்த்த போது உச்சைர்வத்தின் வால் கருப்பாக தோன்றியது. இவ்வாறு சூழ்ச்சியால் தோற்ற விநதை கத்ருவின் அடிமையாக ஆகின்றாள்.
குறிப்பிட்ட காலத்தில் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.
தன் அன்னை , சிற்றன்னைக்கு அடிமையாக சேவை செய்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருடன் தன் அன்னையிடம் அவரது இந்த நிலைக்கான காரணத்தை கூற வேண்டுகிறான். விநதையும் நடந்ததைக் கூறுகின்றாள். கருடன் தன் சிறிய தாயாரிடம் சென்று தன் தாய்க்கு விடுதலை அளிக்குமாறு வேண்டுகின்றான். அலட்சியமாக கத்ருவும் தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வா? உன் தாயை விடுதலை செய்கின்றேன் என்று ஆணவத்துடனும், அந்த காரியம் முடியாதது என்ற நம்பிக்கையுடனும் பதிலிறுக்கின்றாள். ( இன்னொரு வடிவில் அவள் சந்திரனை இழுத்து வருமாறும் அதில் உள்ள அமிர்தம் நிறைந்த ஓட்டைகளையும் சேர்த்து கொண்டு வருமாறும் உள்ளது )
இப்போது ஒரு கிளைக் கதை – நமது சிற்பத்துடன் தொடர்பு உள்ள இடம் . தன் தாயின் துயர் தீர்க்க யாராலும் முடியாததையும் செய்ய, தாயிடம் ஆசி பெற்று புறப்பட இருந்த கருடனுக்கு ஒரே பசி. பசியாற உணவைத் தேடும் அவனுக்கு அவன் தாய் கடலோரத்துக்கு சென்று அங்கு இருக்கும் ஜீவராசிகளை உண்டு வருமாறு கூறி ( அங்கு எந்த பிராமணனுக்கும் தீங்கு நேரிடாமல் நட என்றும் கூறுகிறார். கடற்கரைக்கு சென்ற கருடன் அங்கு ஒரு மீனவ கிராமம் ஒன்றை அப்படியே விழுங்கிவிட்டான். அப்போது அவன் வயிறு எரிகிறது – விழுங்கியவர்களுள் ஒருவர் அந்தணர் என்று அறிந்து அவரை வெளியில் உமிழ்கிறான். அவரும் தனது மனைவி – ஒரு மீனவப் பெண்மணி – அவளையும் காப்பாற்றுமாறு கூற – கருடனும் அவ்வாறே செய்கிறான் )
பின்னர் இன்னும் பசி தீராமல் இருக்கவே, தன் தந்தையை நாடிசெல்கிறான் கருடன். காஷ்யபர் அவனை அருகில் ஒரு ஏரியின் கரையில் பல காலமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு யானை மற்றும் ஒரு ஆமை – அவற்றை தின்று நீ பசியாறு என்கிறார்.
கருடனும் அங்கு விரைகிறான் – அங்கே ஒரு பிரம்மாண்ட ஆமை ( எண்பது மைல் பெரியது ) , யானையோ ( நூற்றி அறுபது மைல் ) – அப்பாடா – கருடன் ஒரு கையில் ஆமையையும் ஒரு கையில் யானையும் பிடித்து, அவற்றை உண்ண சரியான இடம் தேடுகிறான் . அங்கே ஒரு பேரு மரம் அவனை வரவேற்றது ( மரம் எட்டுநூறு அடி உயரம் ) – அதன் கிளையில் அமர்ந்த கருடன் , மூவரின் பாரத்தினால் கிளை உடைவதும், அதே கிளையின் அடியில் முனிவர்கள் பலர் தலை கீழாக தவம் புரிவதும் கண்டு திடுக்கிட்டான். உடனே கிளையை வாயில் கவ்வி – அருகில் இருந்த மலையின் உச்சிக்கு சென்று முனிவர்களை இறக்கி விட்டு, தன் இரைகளை தின்று முடித்தான்.
இந்த கதையைத் தான் நான் அமர் சித்ரா கதாவில் படித்தேன் – இதோ அவை.
சரி, சிற்பம் – அதுவும் இதோ திருக்குறுங்குடி கோவில் சிற்பம். கருடனின் வலிமை, ஒரு கையில் யானை, மறு கையில் ஆமை – மூக்கில் மரம் – மரத்தில் தொங்கும் முனிவர்கள் – அருமை .
சரி, அடுத்து மீண்டும் கதை – இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது. உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து – அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு , ஒரு இயந்திரம் – வெட்டு கத்திகள் பொருந்தியது – சுழன்று கொண்டே இருக்கிறது – தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் – அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.
32323188
திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர – இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து – ஒரு சமரசத்திற்கு வருகின்றனர். விஷ்ணு கருடனுக்கு அமிர்தத்தை அருந்தாமலே அமர ஆயுளை தருகிறார், கருடனும் தன் பனி முடிந்தவுடன் அவரின் வாகனமாக இருக்க வாக்கு தருகிறான்.
32453247
அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் . ஆயினும் அவனாலும் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை எய்கின்றான், கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.
இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். அவ்வாறே இன்று வரை உள்ளது.
பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த சிற்றன்னையிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான்.
திருக்குறுங்குடி படங்கள் : திரு அசோக் மற்றும் கிரிதரன்
திருகொயிலூர் கருடன் படம் : திரு. சத்தியன்