பல நேரங்களில் நம்மையும் மீறிய சில செயல்கள் – நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. அதுபோன்று ஒரு நிகழ்வே இந்த பதிவு. ஓவியர் நண்பர் திரு பிரசாத் அவர்கள் ஒரு சிலையை ஓவியமாய் தீட்ட இணையத்தில் தேட, அப்போது மன்னார்குடி ராஜகோபாலசுவாமி படம் கிடைக்க, அவரும் அதை அழகாக தீட்டி என்னிடம் அனுப்பினார். அதை நண்பர் அசோக் பார்த்துவிட்டு அவர் உபயோகித்த படம் தான் எடுத்து என்றும் சொன்னார். அற்புதமான படம், அதை ஒட்டி, மதிமயக்கும் ஓவியம் – இரண்டையும் பார்த்தவுடன் இதைப் பற்றிய வர்ணனைனைக்கு சரியான வல்லுனர்கள் – நண்பர் திரு தேவ் மற்றும் வரலாறு .காம் நண்பர் கோகுல் அவர்களின் தந்தையார் திரு சேஷாத்ரி – இருவரையும் அணுகினேன். இருவருமே அருமையான பதிவுகளை தந்தனர். இரண்டையும் சேர்த்து இந்த பதிவு.
நாம் கண்களை மூடி மனதில் இதுவரை நாம் கண்டு நெகிழ்ந்த திருமேனிகளை நினைத்துப்பார்க்கையில் வரும் காட்சிகள்
1. அழகிய மணவாளன் – ஸ்ரீரங்கம்
2. திருமலை தெய்வம் (மூலமூர்த்தி)
3. ராமபிரான் -தில்லை விளாகம்
4. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி
கண்ணபிரான் யதுகுலத்தில் தோன்றி, கோகுலத்தில் வளர்ந்தருளினான். ஆநிரை மேய்த்தாலும் அரசர்க்குரிய காம்பீர்யம் சற்றும் குறையவில்லை. இக்கோலத்தில் ஆழங்கால் பட்ட அடியவர்கள் ‘ராஜ கோபாலன்’ என்றழைத்து இன்புற்றனர்
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி
கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு,வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை. ஸ்ரீ வில்லிபுத்தூர், காட்டுமன்னார் கோவில்,மன்னார்கோவில்,மேலப்பாவூர், ராஜமன்னார் குடி ஆகிய இடங்களில் இப்பேரழகைக் காணலாம். இவை அனைத்தினுள்ளும் புகழ் பெற்றது மன்னார்குடி மட்டுமே.மன்னார்குடி ‘தக்ஷிண த்வாரகை’ என்னும் பெயர் பெற்றது; அழகான மதிற்சுவர் அமையப் பெற்றது.
இவ்வூரின் பெருமையை ‘ஊர்பாதி, குளம்பாதி’, ‘மன்னார்குடி மதிலழகு’என்னும் வழக்கிலிருந்து அறியலாம்.ஊரைச் சுற்றியோடும் பாமணியாறு தவிர,மேலும் ஒன்பது நீர்நிலைகள் பல்வேறு பெயர்களில் புராணகாலம் தொட்டு இன்றுவரை வளம் காத்து வருகின்றன.இவ்வூரில் பேரறிஞர் பலர் வாழ்ந்துள்ளனர்.
உற்சவ மூர்த்தியான ஸ்ரீவித்யா ராஜகோபாலனை வர்ணிப்பது கடினம்.
இவன் கோஸகன்; ஆமருவியப்பன். ஒரே பட்டாடையை இடுப்பில் சுற்றிகொண்டு அதையே பின்புறமாகக் கொண்டு சென்று ஒயிலான தலைப்பாகையாகவும் ஆக்கிக்கொண்டுள்ளான். ‘த்ரைமம் வேத்ரம்; ஏக வஸ்த்ரம்’ என்று தொடங்கும் இவனைப் போற்றும் சுலோகம். மூன்று வளைவு கொண்ட சாட்டையும்,ஒற்றை ஆடையும் தனிச்சிறப்பு.இந்த ஆயர் சிறுவனின் மேனியழகில் மனத்தைப் பறிகொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் அந்திம காலத்தில் இங்கேயே வாஸம் செய்தாராம்.*
இதோ திரு பிரசாத் அவர்களின் ஓவியம்
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரவர்கள் ‘பால கோபால ‘ (பைரவி) ,’ஸ்ரீ வேணு கோபால’ ( குறிஞ்சி), ‘ ஸ்ரீ ராஜ கோபால’ ( ஸாவேரி) போன்ற பல பாடல்களை ராஜகோபாலன் விஷயமாகப் பாடியுள்ளார். ஊத்துக்காடு வேங்கட கவியின் கண்ணன் பாடல்கள் எல்லாமே இவனைப் பற்றியவையே என்று கூறுகின்றனர்.
நன்றி
http://raga-artblog.blogspot.com/2008/10/rajagopalaswamy-temple-mannargudi.html
www.srirajgopalaswamy.blogspot.com