நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள ஒரு அற்புத வடிவத்துடன் துவங்குவோம்.
நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி புண்ணியத்தில் இந்த வருடப்பிறப்புக்கு ஸ்ரீமுஷ்ணம் சென்றோம் – அதுவும் கல்வெட்டு கலைஞர் முனைவர் திருமதி மார்க்ஸ்யா காந்தி அவர்களுடன் செல்லும் பாக்கியம் கிடைத்தது. பல அற்புத சிலைகள் பார்த்தோம் – அதில் எனக்கு மிகவும் பிடித்ததை இன்று பார்ப்போம்.
பூவராஹா சுவாமி ஆலயத்தை பார்த்துவிட்டு அதை ஒட்டி இருக்கும் சிவன் கோயிலுக்கு நடக்கும் போதே பெரிய செங்கல் மதில் சுவர் தென்பட்டது. நான் இவ்வளவு பெரிய ப்ரஹாரட்தை எதிர்பார்க்கவில்லை.
( இரண்டாவது படம் திரு ராஜேந்திரன் அவர்களது – Raju’s temple visits)
உள்ளே செல்லும் வரை சற்று அசதியாகவே இருந்தது. ஆனால் எதிரில் கண்ட சோழர் கலை உடனே உற்சாகம் ஊட்டி துள்ள வைத்தது.
நிறைய சொல்லவேண்டும், காட்டவேண்டும் – எனினும் இன்று நாம் பார்க்க இருப்பது…அதற்கு முன்னர் இந்த வடிவம் – நான் வரலாறு டாட் கம வலைத்தளத்தில் இந்த பதிவை பார்க்கும் போதே ஆவலை தூஒண்டி மனதில் பதிந்துவிட்டது
மூன்று யானைகள் சேர்ந்து யானைக்கு பிரசவம் பார்க்கும் காட்சி. இதே போல எங்காவது நம் கண்ணிலும் படுமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். இந்த கோயிலில் அந்த தேடலுக்கு விடை கிடைத்தது. தேவ கொஷ்டங்களின் நடுவில் ஒரு அலங்கார தூண். அதில்…
நடுவில் உள்ள சிறு சிற்பம் கண்ணில் பட்டது.
என்னடா – ஏதாவது யானைகள் ஏடாகூடமாக இருக்கும் சிற்பமோ என்ற பயம் ஒரு புறம் இருக்க – ஒரு முறைக்கு இருமுறை அருகில் சென்று உறுதி செய்து கொண்டேன்.
நண்பர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் கேட்டவுடன் உடனே படமாக வரைந்துக் கொடுத்தார். என்ன அழகாக தாய் யானை அலங்கார வளைவை தனது தும்பிக்கையால்
சுற்றி பிடித்து முயற்சி செய்கிறது…
இரு வடிவங்களை பார்த்த பின்னர் – அவற்றில் உள்ள ஒற்றுமைகளை காணமுடிகிறது. முன் பக்கம் இருக்கும் யானை பிரசவிக்கும் யானையின் கழுத்தையும், நடுவில் இருக்கும் யானை இடுப்பை இறுக்கி பிடித்தும், பின்பக்கம் இருக்கும் யானை வாலைத் தூக்கி பிடித்தும் இருக்கின்றன. இயற்கையிலும் இது போல தான் யானைகள் பிரசவம் பார்க்குமோ ??