தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் இருப்பது ஸ்ரீ ராஜராஜர் மற்றும் கருவூர் தேவர் அல்ல

புகழ் பெற்ற பெரிய கோயில் சோழர் கால ஓவியம் என்று நாம் பல காலம் பார்த்து ரசித்த ஒரே படம், ராஜராஜர் மற்றும் கருவூர்த்தேவர் என்று பல வல்லுனர்கள் நமக்கு தங்கள் நூல்களின் மூலம் கூறி நாம் ரசித்த ஓவியம் – உண்​மையில் அவர்கள் அல்ல. இதுவும் பெரிய கோயில் நிழல் போல இணையத்தில் வலம் வரும் ஒரு தவாறன கருத்து.

இந்த ஓவியங்கள் இருந்த இடம், அவற்றின் அளவு மற்றும் தெளிவான படங்கள் கொண்ட ஆராய்ச்சி நூல் எதுவும் வெளி வராத​தே இந்தத் தவறான கருத்துக்குக் காரணம். இதைத் தவறு என்று நாம் இன்று கருத என்ன காரணங்கள் உள்ளன என்பதை விரிவாக பார்ப்போம்.

1. முதலில் – மாமன்னர் உடையார் ராஜராஜ சோழர் அரியணை ஏறுவதற்கு முன்னர் அருள்மொழிவர்மராய் பதினைந்து வருடங்கள், அதாவது 969 முதல் 985 CE வரை காக்க வேண்டியிருந்தது. மேலும் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட வருடம் 1010 CE (இவை நமக்கு அவர் விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு பொன் கொடுத்ததை சொல்லும் கல்வெட்டின் நாளை கொண்டு தெரிய வருகிறது) அதாவது அவர் அரியணை ஏறிய பின்னர் 275 நாட்கள் 25 வருடங்கள். கூட்டிப் பார்த்தால் 985 + 25 = 1010 CE. மேலும் இதுவரை நமக்கு கிடைத்த கல்வெட்டுகளில் அவரது கடைசி ஆட்சியாண்டை குறிக்கும் கல்வெட்டுகள் அனைத்தும் 29ஆம் ஆண்டு தான், அதாவது 1014 CE. இவற்றை வைத்துப் பார்க்கும்​போது பெரிய கோயில் கட்டிய பிறகு ஓவியங்கள் வரையும் நேரம் அவர் சற்று வயதான​போது தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆக ஓவியத்தில் கட்டிளம் கா​ளை போல் இருக்க சாத்தியம் இல்லை.


மேலும், சமகாலத்தில் வரையப்பட்ட பக்கத்துக்கு சுவர்களில் இரண்டு இடங்களில் அவரது உருவப்படம் உள்ளது. தில்லை கூத்தனின் எதிரில் தனது மனைவிமார்களுடன் நிற்கும் காட்சியிலும், பெருவடையார் முன்னர் அமர்ந்த கோலத்திலும் – அவர் வயதான கோலத்தில் பெரிய தாடியுடன் இருக்கிறார்.

2. அடுத்த முக்கிய ஆதாரம் – பொதுவாக ஓவியத்தில் கருப்பொருள் நடுவில் வரையப்படும். வெளிப்புறத்தில் இருக்கும் அனைத்தும் ஓவியத்தை காண்போர் பார்வை உட்புறம் – கதையின் கருப்பொருளை நோக்கியே இருக்கும். மன்னர் பெரும்பாலும் அ​னைத்து சாமானியரைக் காட்டிலும் சற்றே பெரிதாக இருப்பார் – கடவுளுக்கு அடுத்த படியில்.


இந்த ஓவியங்களை பற்றிய நல்ல படங்கள் இல்லாத காரணம் தான் முன்னர் பலரும் இவ்வாறு தவறாக அடையாளம் கொள்ள காரணம் என்று நினைக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக தொல்லியல் துறை மற்றும் திரு. சீதாராமன், ஓவியர் திரு. சந்துரு மற்றும் திரு. தியாகு அவர்களின் அரிய படைப்பில் இரண்டு நூல்கள் வெளி வந்துள்ளன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சோழர் ஓவியம் மற்றும் தொல்லியல் துறை நூல்கள் தான் அவை.

3. மேலே குறிப்பிட்டவற்றை நினைவில் கொண்டு மீண்டும் அந்த இருவருடைய ஓவியத்தை பார்ப்போம். ஆனால் இப்போது சற்று தொலைவில் இருந்து முழுச்சுவற்றில் உள்ள அனைத்தையும் காண்போம். அவர்கள் இருவருக்கு மேலே அவர்களை விட அளவில் சற்று பெரியதாகவே இருவர் நிற்பதைக் காணலாம். மேலும் சுவற்றின் ஓரத்தில் இருவரும் உள்ளனர்.


கண்டிப்பாக மாமன்னரை இப்படி சித்தரிக்க வாய்ப்பே இல்லை.

4. சரி, இவர்கள் மாமன்னரும் கருவூர்த்தேவரும் இல்லை என்றால் வேறு யாராக இருக்க முடியும்? ஒரு விஷயம் இங்கு நாம் கவனிக்க வேண்டும். பெரியவர் பூணூல் அணிந்திருக்கும் பாணி – வழக்கத்துக்கு மாறாக வலது தோள் மீது – அதாவது ஈமச்சடங்குகளின் ​போது அணியும் பாணியில் இருப்பது. அப்போது இது ராஜேந்திர சோழர் மற்றும் கருவூரார் என்று ஒரு வாதம் உள்ளது. ஒருவேளை மாமன்னர் இறந்த பின்னர் ….

அப்படி இருக்க சாத்தியங்கள் குறைவு – கருவ​றையின் வெளிச்சுவற்றில் இருக்கும் இந்த ஓவியங்கள் மங்கள காட்சிக​ளைத் தான் குறிக்கும்.

ஒருவேளை மேல் துண்டு தான் நம் கண்ணுக்கு வஸ்திர யக்​ஞோபவீதம் போல தெரிகிறதோ?

5. வேறு யாராக இருக்க முடியும்? தஞ்சை அரண்மனை அருங்காட்சியகத்தில் நாரதர் மற்றும் சித்திரசேனர் சிற்பம் ஒற்று இருக்கிறது. இதை ஓவியத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்​போது…

6. இன்னும் ஒரு தடயம் நமக்கு உதவுகிறது. சுந்தரர் சேரமான் பெருமாளுடன் கைலாயம் செல்லும் காட்சியை அப்படியே படம் பிடித்து காட்டும் ஓவியம் ..

மேல் பக்கம் நீங்கள் பார்க்கும்​போது இடது புறம் பாருங்கள்.

வானுலகத்தில் பலரும் இந்த அற்புத காட்சியை காண அணிவகுத்து நிற்கின்றனர்.

இவர்கள் த்வாதச ஆதித்யர்கள் மற்றும் ஏகாதச ருத்ரர்கள்

அவர்களை ஒட்டி ஓரத்தில் நிற்கும் இருவரை பாருங்கள்.

சுந்தரரும் சேரமான் பெருமாளும் கைலாயம் செல்லும் போதே வானுலகத்தில் நின்று அவர்களை வரவேற்கும் இருவர், பல காலம் பின்னர் மண்ணில் தோன்றி சோழர் பெருமையை உலகெங்கும் பரவச் செய்த மாமன்னர் ராஜராஜரும் கருவூர்த்தேவராகவும் இருக்க முடியாது.

படங்கள் உதவி : திரு கோகுல் சேஷாத்ரி , திரு தியாகு , திரு ஸ்ரீராமன் , திரு ஓவியர் சந்துரு மற்றும் ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *