இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது – தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் – அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.
இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.
முதலில் சற்று தொலைவில் இருந்து .
கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?
சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.
சம்பந்தர் தேவாரம் – திருமுறை 1.10.8
ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.
ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.
கஜமுகாசுரன் – அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு – சிற்பத்தை பாருங்கள்.

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து – அப்பப்பா – பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் – உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,
அப்போது அந்த குள்ள பூதகணம் – ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.
இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை – அவள் மடியில் குழந்தை முருகன் – மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் – அருமை.
– இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு – அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?