காமனை எரிக்கும் ஈசன் – தஞ்சை பெரிய கோயில்

இன்று மீண்டும் சில அற்புதமான தஞ்சை பெரியகோவில் சிற்பங்களை காண்போம் – காமதேவனை எரித்த கயிலை சிவன் ( திரு சதீஷ் அவர்கள் படம் எடுக்க மட்டும் அல்ல நல்ல தமிழ் ஆற்றல் உடையவர் என்று இன்றுதான் அறிந்தேன் – இதோ அவரது படங்கள் மற்றும் வர்ணனை )

முதலில் காமதேவனை பற்றிய சில குறிப்புகள் – மன்மதன், உருவிலாளன், கருப்புவில்லி, கரும்பன், நாரன், புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், மாரன், மான்மகன், வசந்தன், வேனிலான் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காமதேவன் தேவர்கள் யாவரிலும் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமான, மகரக்கொடியுடைய மன்மதனின் ஆயுதங்கள் என்னவோ ரீங்காரமிடும் வண்டுகளை நாண்களாக உடைய கரும்பாலாகிய வில்லும், ஐந்து மலரினாலாகிய அம்புகளும்தான், இவன் தன் ஆயுதங்கள் மெலிதாயினும் அதன் வலிமையோ வெல்வதற்கரிது. தன் மனைவி ரதியோடு வாகனமாகிய கிளியில் அமர்ந்து, தென்றலாகிய தேரில் வலம் வரும்பொழுது, தென்படுவோர் யாவரும் தென்றலால் மனம் இளக, ரதி தேவி இச்சையை உண்டாக்க, காம பாணத்தை செலுத்துவார் காமதேவன், இதில் வீழ்ந்தோர் தப்பித்ததில்லை.

(சில மாதங்களுக்கு முன் அகத்தியர் குழுமத்தில் திரு. K. Shrikanth அவர்கள் எழுதிய காமபாணத்தை பற்றிய கட்டுரையில் இருந்து சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.) பஞ்சபாணம் எனப்படும் மன்மதனின் பாணம், தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை மற்றும் குவளை (நீலோத்பலம்) மலர்களால் ஆனவை. இந்த ஐந்து மலர்கணைகளையும் உடம்பின் வெவ்வேறு பாகங்களில் செலுத்த உண்டாகும் விளைவுகளும் ஐந்துவகை. மார்பைத் தாக்கும் தாமரை உன்மத்தம் எனும் போதையைத் தர, மெல்லிய உதடுகளை தாக்கும் அசோகம் தன் துணையை நினைத்து ஏங்கி புலம்பச் செய்ய, முல்லையோ கண்களைத் தாக்கி உறக்கத்தை கெடுக்க, மாம்பூவோ தலையை தடவி காதல் பித்து கொள்ளச் செய்ய, முடிவில் நீலோத்பலம் எனும் குவளை மலர்க்கணை விரகதாபத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உணர்விழக்கச் செய்யும்.

(காண்க: http://manoranjitam.wordpress.com/2008/01/21/legend-of-kaama/)

காமனின் அறிமுகம் போதும், இனி நம் கதைக்கு வருவோம்.

இந்த கதையும் சிற்பங்களும் நாம் முன்னே கண்ட தக்ஷன் தலையக் கொய்த ஈசன் கதையின் தொடர்ச்சியாகவே வருகிறது. தன் மணாளனான மகேசனுக்கு யாகத்தின் பொழுது சேரவேண்டிய அவிர்பாகத்தை தராமலும் தன்னை மகள் என்றும் பாராமல் தட்சனால் தானும் தன் மணாளனும் அவமானப்பட்டதை தாங்க முடியாமல் தாட்சாயணி யாகாக்கினியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்த ஈசன் சக்தியில்லையேல் சிவமில்லை என நினைத்து யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அழிக்கும் கடவுளாகிய பரமசிவன் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால் தீயசக்திகளின் கொட்டத்தை கேட்கவா வேண்டும். இந்த சமயத்தில் தாரகாசூரன் எனும் அசுரன் பற்பல ஆண்டுகளாக பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தின் உறுதியை கண்ட பிரம்மன் வேறுவழியின்றி அவன் முன் தோன்ற, வழக்கம்போல் சாகாவரம் கோரினான் அசுரன். பிரம்மன் மறுக்கவே சிவனின் ஆழ்ந்த தவத்தையும் சக்தியின் மறைவையும் அறிந்திருந்த அசுரன் புத்திசாலித்தனமாக (அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டு) சிவனின் குமாரனைத் தவிர வேறு யாராலும் தனக்கு எந்தவித துன்பமும் நேரக்கூடாது எனக்கோரி வரத்தைப் பெறுகிறான்.

வரம்பெற்ற அசுரனின் நடவடிக்கைகள் வரம்பு மீறுகிறது, அனைத்து உலகங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் கொடுமைப் படுத்தி துன்பத்தில் ஆழ்த்திவிட்டான். தேவர்கள் யாவரையும் ஒருவர் பின் ஒருவராக வெற்றி கொண்டு அவர்களிடம் உள்ள பெறுதற்கரிய பொக்கிஷங்களை பிடுங்கிக் கொண்டு அவர்களை சிறைப்படுத்தினான். அமிர்தமதனத்தின் பொழுது கிடைத்த ஐராவதம், உச்சைசிரவம் முதலியவற்றை இந்திரனிடம் இருந்தும், கேட்டதெயெல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமதாக்கினி முனிவரிடம் இருந்தும், குபேரனின் அரிய ஆயிரம் குதிரைகளையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல், வாயுவையும் தன் விருப்பத்திற்கு ஆட்டி வைத்தான். சூரிய வெப்பத்தை அடக்கி குளிர்ந்த சந்திரனையே எப்பொழுதும் பிரகாசிக்கச் செய்தான். இவன் கொடுமைகளை தாங்க இயலாமல் தேவர்கள் அனைவரும் தங்கள் உல்லாச அரண்மனைகளை துறந்து கானகங்களில் ஒளிந்து திரிந்து வாழ்ந்துவந்தார்கள்.

அசுரனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்த தேவர்கள் ஒன்றுகூடி அசுரனை அழிக்க ஆலோசித்தனர், அந்த நேரத்தில் அனைவரும் ஒட்டுமொத்தமாக அசுரனுக்கு வரமளித்த பிரம்மனை நிந்தித்தனர். தேவர்களின் துன்பத்தை கண்ட பிரம்மன், தான் அளித்த வரத்தில் உள்ள சூட்சுமத்தை தேவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆழ்ந்த தவத்தில் இருக்கும் ஈசனின் தவத்தை கலைப்பது எவ்வாறு என்று தேவர்கள் ஆலோசனையில் இறங்கினர்.

இதற்கிடையே பிள்ளைபேறு வேண்டிய இமவானின் தவத்திற்கிணங்கி, உமையாள் “பார்வதி” என்ற பெயருடன் இமவான், மனோரமா தம்பதிகளின் மகளாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈடிணையில்லாத அழகியாக வளர்ந்த பார்வதி பருவமடைந்தவுடன் தன் உண்மை நிலை அறிந்து மகேசனிடம் மனதை செலுத்தி தவம் மேற்கொள்கிறாள்.

இதனை உணர்ந்த இந்திரன் முதலானோர் மன்மதனை அழைத்து தங்கள் கோரிக்கையை வைத்து இறைஞ்ச காமதேவன் பயத்துடனும், தயக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறான். இதனை தொடர்ந்து சகல ஆயத்தங்களுடன் கயிலையை நோக்கி பயனிக்கிறான். கவலையினாலும் சினத்தாலும் மோனத்தில் இருந்த பவளமேனியானின் வண்ணம் நெருப்புக் கனலாகத் தெரியவும், கயிலையில் சகலமும் ஒடுங்கி நிசப்தமாயிருப்பதைக் கண்டும் செய்வதறியாது பல காலம் திகைத்து நின்றான்.

இப்படி செய்வதறியாது நின்ற காமனின் கண்களில் தன் உள்ளம் கவர்ந்த நாயகனின் ஆராதனைக்காக மலர்கள் பறிக்க வந்த பார்வதி தேவி கண்ணில் பட, இதுதான் தக்க சமயமென நினைத்து தன் மலர்கணையை நாணேற்றிவிட அதுவும் குறி தவறாமல் மகேசனின் மார்பை ஸ்பரிசித்தது. கோபாக்கினி ஒளிர திடுக்கிட்டு தவம் கலைந்த கையிலைநாதனின் கண்களில் மலர்கள் பறித்துக் கொண்டிருந்த கனிவான, அழகு மிளிரும் பார்வதி தேவியின் முகம் தெரிய அவரது மனம் கனிந்தது. அடுத்த கணமே தவம் களைய காரணமான மன்மதன் அவர் கண்களில் தெரிய கோபத்தில் நெற்றிக்கண் திறந்து காமதேவன் சாம்பலானான்.

இதனைக் கண்ட ரதி தேவி அழுது புரண்டு இறைவனை வேண்ட பரமனும் மனம் இளகி காமதேவனுக்கு அருவுருவ (சூட்சும) உடலளித்து அவன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவான், உண்மை காதலின், அன்பின் உருவமாய் இருப்பான் என்று அருள் செய்தார்.

இதன்பிறகு முருகன் (கந்தன்) பிறந்து கொடிய அசுரர்களை அழித்து தேவர்களை காத்த கதையை நாமறிவோம். (காளிதாசனின் குமார சம்பவத்தில் இந்தக் கதை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது)

சற்றே நீளமான பதிவாயினும் சுவாரசியமானதல்லவா, இனி சிற்பங்களை காண்போம்.

முதலாவதாக முழு சிற்பத் தொகுதிகளையும் பார்க்கலாம், மேற்பாக முதல் வரிசையில் சிவயோகிகள் இருக்க, கீழே கடைசி வரிசையில் பயபக்தியுடன் சிவகணங்கள் இருக்க, மொத்த கதையும் மூன்று காட்சிகளில் விளக்கப்பட்டுள்ளது.

முதல் காட்சி, ஆழ்ந்த தவத்தில் இருக்கும் சிவன், மிகச் சிறிய சிற்பமாயினும் சிவனின் கண்கள் மூடியுள்ளதை மிக நுணுக்கமாக வடித்துள்ள சிற்பியின் கலைத்திறனை கட்டாயம் பாராட்ட வேண்டும். வசீகர காமவேந்தன் மலர்க்கணையை சிவனை நோக்கி குறிவைக்கிறான். (காமதேவனின் இதழ்களில் புன்சிரிப்பு தெரிகிறதா? சற்றே கூர்ந்து கவனியுங்கள்!)

இரண்டாவது காட்சியில் முதலில் வருவது, வீழும் காமன், அழுது புலம்பும் ரதி. அடுத்த சிற்பம் சற்றே சிதைந்திருந்தாலும் வீழும் காமனை அழகாய் காட்டுகிறது. தலையில் அடித்துக் கொண்டு அழும் ரதியையும் பாருங்கள். (தென்னிந்தியாவின் துக்க வீடுகளில் இது போன்ற காட்சிகளை காணலாம்)

முடிவாக, இரண்டாவது காட்சியின் வலப்புறம் காண்பது பயபக்தியுடன் மீண்டெழுந்த மன்மதனும் மகிழ்ச்சியில் திளைக்கும் ரதியும் சிவனிடம் ஆசிபெறுகிறார்கள், பூதகணங்களும் சூழ்ந்திருக்கின்றன.

இதை காணும்பொழுது கம்போடியாவிலுள்ள பண்டியா ஸ்ரெய் காம்ப்ளக்ஸில் உள்ள இதே போன்ற சிற்பங்களை நினைவுபடுத்துகிறது. இந்த சிற்பங்களை பிறகு தனிப் பதிவில் பார்க்கலாம்.

பன்னிரு திருமுறை குறிப்பு – இதோ ( நன்றி திரு வி. சுப்பிரமணியன் ஐயா அவர்கள் )

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41030&padhi=103&startLimit=3&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC


தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்கு வாயாக.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=476&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.

`அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம் முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண் களையுடைய நீண்ட திருமாலும் நான்கு முகங்களையுடைய நான்முக னும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப் பாம்புகளை அணியாய் அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள் எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறை வனே! காப்பாயாக!’ என்று கூறியவள் பின்னும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *