நமது புராணங்களில் வரும் கதைகளின் தாக்கம் இந்திய எல்லைகளை தாண்டி எங்கெல்லாம் சென்றுள்ளது என்று அறியும் போது மெய் சிலிர்க்கிறது. கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் இருக்கும் சிற்பங்களின் வடிவங்கள் சற்று மாறுபட்டு இருந்தாலும் அவற்றில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைகளின் ஆழம் பிரமிக்கவைக்கின்றது.
இன்றும் அது போல ஒரு அற்புத வடிவம் – கம்போடியா பன்திய ஸ்ரெய் கோவிலில் – காமன் ஈசனை குறி பார்க்கும் வடிவம் இதோ.
முன்னர் நம் சோழ சிற்பி தஞ்சை பெரிய கோவிலில் இதே கதையை மூன்று பாகங்களாக தன் சிற்பத்தின் மூலமாக இந்த கதையை விளக்கி இருந்தான். இப்போது கம்போடியா சிற்பி இதை சிற்பி இதை எப்படி சித்தரிக்கின்றான் – பார்போம்.
ஒரே சிற்பம் – அதனிலேயே முழுக் கதையையும் அப்படியே காட்ட வேண்டும். காமன் தனது
நாணை ஏற்றி ஈசனை குறி பார்க்கிறான் – அது முதல் காட்சி. ஈசனின் அமர்ந்த
கோலம் – அருமை – ( அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கீழே மூன்று அடுக்கு – பல முனிவர்கள் , மிருகங்கள், பூத கணங்கள் ) – ஆனால் அவர் காமனை பார்க்கும் பார்வை – ஆம் – சுட்டெரிக்கும் பார்வை மிக மிக அருமை.
ஈசனின் மறு பக்கத்தில் – ஒரு பெண்மணி மிக பணிவுடன் ஈசனின் கரத்தில் இருந்து ருத்ராக்ஷ் மாலையை கையில் வாங்கியவாறு உள்ளது – ஈசன் தனது தி்யான நிலையை விட்டு பார்வதியிடம் காமனின் பாணத்தின் தாக்கத்தால் நாடுவதை காட்டவோ ?