பள்ளிகொண்டிருக்கும் அரங்கனை எதிர்த்து சதி பேசும் அசுரர்கள் – மல்லை

இன்றும் ஒரு சுவாரசியமான கதையோடு தொடர்புடைய சிற்பத்தை காண்போம் – மகாபலிபுரம் சென்று வந்த யாரும் இந்த சிற்பத்தை பார்க்காமல் திரும்பும் வாய்ப்பு குறைவு அதேபோல் இதன் பின்னனி கதையை அறிந்து ரசிக்கும் வாய்ப்பும் குறைவு. மகிஷாசுரமர்தினி மண்டபத்திலுள்ள அனந்தசயனின் சிற்பத்தை கண்டுகளிப்போம். ஊழிக்கால விஷ்ணுவின் மறத்தை பறை சாற்றும் கதையிது.

சற்றே வழக்கத்திற்கு மாறாக, முதலில் அனேகமானோர் அறியாத சிற்பத்தை பார்ப்போம் பிறகு கதைக்குச் செல்வோம்.

கல்லைக் குடைந்து கலைநுணுக்கத்தோடு கதையின் நாயகர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தும் கண்முன்னே வாழவைக்கும் தனித்துவம் வாய்ந்த சிற்பங்களைப் படைத்த சிற்பியின் திறமையை என்னவென்று வியப்பது.

இந்த அனந்தசயனனின் சிற்ப வகையின் சிறப்பை பேராசிரியர் சுவாமிநாதன் மூலம் தெரிந்துகொண்ட போது நான் மேலும் அதிசயப்பட்டேன்.

இப்பொழுது கதை, ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் முழு உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் ஆயிரம் தலை நாகத்தின் அணையில் பள்ளி கொண்டு (அனந்தசயனன்) யோகநித்திரையில் ஆழ்ந்திடுவான் பரந்தாமன். சகலமும் ஒடுங்கிய நேரம், பிரம்மன் மட்டும் அடுத்த யுகத்திற்கான தன் படைப்புத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்.

“உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான்” என்று மகாவிஷ்ணுவை வர்ணிப்பார் நம்மாழ்வார். திருமால் படுத்திருப்பது போல பாவனை செய்தாலும் அவன் என்றுமே யோக தவத்தில் ஈடுபடுபவன். அப்படிப்பட்ட திருமால் ‘உறங்குவான்’ போல இருந்திருக்கும் நிலையில் அவன் செவியின் குறட்டை தூசி வெளிப்பட அதிலிருந்து வந்தவர்கள்தான் மது-கைடவர்கள் எனும் அரக்கர்கள்.

இவர்கள் இருவரும் தங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லையென நினைத்து பிரம்மனை ஆட்டிப்படைத்தனர். பிரம்மன் தன் படைப்புத் தொழிலை செய்ய விடாமல் தடுத்தனர், பிரம்மனின் வேதங்களை பிடுங்கிக் கொண்டு படைப்பின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்தனர். இவர்களை பிரம்மனால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

(மது என்றால் சமஸ்கிருத்தில் தேன். மனதை மயக்கும் அதீதச் சுவை, மது என்றால் கள், சாரயமும் கூட. கை – என்றால் ஓசை என்று சமஸ்கிருத்தில் பொருள், கைடப என்பது இயலாமையால் உருவாகும் ஓசையை குறிக்கும். இந்த இரு தீய சக்திகளுள் மது நம்மை ஏதாவது ஒன்றாக உருவகப்படுத்தி காட்ட, கைடபவோ நம்மை எல்லாமாகவும் உருவகப்படுத்தி நம் உண்மைநிலையை மறைத்து ஒரு மாய தோற்றத்தை உருவாக்கிவிடும்.)

தனது ஞான சக்தியின் துணை கொண்டு விஷ்ணுவால் மட்டுமே இவர்களை அழிக்க முடியும் என்று அறிந்த பிரம்மா, யோகநித்திரையில் இருக்கும் விஷ்ணுவை எழுப்ப யோகமாயையை நாடுகிறார். மாயாதேவியால் துயில் நீங்கிய விஷ்ணு அரக்கர்களை அழித்து பிரம்மனை காப்பாற்றுகிறார் என்பது கதை. (நம் தேவையின் அளவறிந்து கதையை சுருக்கிக் கொள்கிறோம்)

மீண்டும் சிற்பத்தை காண வருகிறோம்,

ஒய்யாரமாய் பாம்பணையில் சாய்ந்திருக்கும் விஷ்ணுவின் எழில் மிகு சாந்தசொரூப முகம் காட்டுகிறது சிற்பியின் திறமையை.

அழாகாய் வடிக்கப்பட்ட இரண்டு கைகள், நீண்ட வலது கை எதையே பற்றிக்கொண்டிருக்கிறது. முழங்கையோடு வளைந்த இடக்கை (சிதைந்துவிட்டது), சற்றே உயர்ந்த மார்பு, சிரம் மற்றும் சிறிதளவு மடிந்த இடது கால்.( ஒருவேளை அவன் எழுப்பப்பட்டதால் எழுந்திருக்க முய்ல்கிறான் போலும்) கண் கவரும் கிரீடம், அழகான மார்பணி மற்றும் காதணிகளை கவனிக்கவும்.

அந்த அனந்தசயனம் படுத்திருக்கும் அன்ந்தனின் சிற்பத்தைப் பார்த்தீர்க்ளேயானால் ஐந்து தலைகளும் நிழல்குடை போல் விரித்த நாகத்தின் தலை அழகுற செதுக்கப்பட்டிருக்கும் சிற்பியின் திறனை இங்கு போற்றவேண்டும்.

படுத்திருக்கும் மகாவிஷ்ணுவின் காலடிப் பகுதியில் ஈடிணையில்லாத ஓர் அழகுத் தேவதையின் சிற்பம். ஒருவேளை பூதேவியா – இல்லை – ம்காவிஷ்ணுவின் மாய உறக்கத்திலிருந்து துயிலெழுப்பும் மகாசக்தியா

அழகாய் சாய்ந்து படுத்திருக்கும் இறைவனுக்கு மேலே இரு பறக்கும் உருவங்களும், கீழே இரு உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இவை மகாவிஷ்ணுவின் ஆயுதங்கள், ஆயுத புருஷர்கள் என்று அழைக்கப்படுபவை. மேல் உள்ள இரண்டு பறக்கும் உருவங்களில் இடப்பக்கம் உள்ளது பாஞ்ச சன்யம் எனும் சங்கு, வலப்பக்கம் உள்ளதோ கௌமோதகி எனும் கதாயுதம். கீழே உள்ள அழகிய உருவங்களில் ஒன்று சுதர்சன சக்கரம் மற்றது நந்தகம் எனும் வாள். (இவை இரண்டும் மார்கண்டேயர் எனவும் பிருகு எனவும் சிலர் கூறுவர்)

(கௌமோதகி – பூதத்தாழ்வார், சுதர்சனம் – பொய்கையாழ்வார், நந்தகம் – பேயாழ்வார் என்றும் விஷ்ணுவின் ஆயுதங்கள் அவதாரமெடுத்ததென குறிப்பிடுவதுமுண்டு)

ஒரு அரக்கன் மற்றவன் தோள் மேல் சாய்வது போல ஏதோ கள்ளமொழியாக செவியில் கிசுகிசுப்பது சிற்பியின் கைவண்ணம். இது நேர்த்தியான திறன். சில நேரங்களில் கலைஞன் தன்னை, தன் திறமையை, உலகுக்கு அடையாளம் காட்ட ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கும் சிற்பம். ஒரு அரக்கன் இறைவனை தாக்க முற்படுதலும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்து ரசியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *