நேற்று வாரணம் ஆயிரம் படம் பார்த்தோம். என்னடா சிற்பத்தை பற்றி பேசும் இவன் திடீரென திரைப்படம் பற்றி பேசுகிறானே என்று அஞ்சாதீர். நான் கட்சி மாறவில்லை.
இயக்குநர் கௌதம் மேனன் “வாரணம் ஆயிரம்” என்று பெயர் வைத்ததுமே பலருக்கு அதன் விளக்கம் தேவை பட்டது. குறிப்பாக,வாரணம் என்றால் என்னவென்று தெரியாமல் பலரும் திகைத்தனர். பிறகு பல இணைய தேடல்களில் , விடைகிடைத்தது– – ‘வாரணம்’ என்றால் யானை. அதுவும் வாரணம் ஆயிரம் என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் வருகிறது.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருவதை அறிந்த ஊர் மக்கள் பொற்குடங்களில் நீர் நிரப்பி ஊரெங்கும் தோரணங்கள் கட்டி அவரை வரவேற்பதாக தான் கனவு கண்டதாக தன் தோழியிடத்தே கூறுகிறாள் ஆண்டாள்.
படத்தின் நிறைவில் ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் கணவன் கோதையின் வர்ணனைக்கு இணங்க இருப்பான் என்று முடியும்.
ஆனால் எனக்கு ஆயிரம் யானை என்றவுடன் நினைவிற்கு வந்தது பீமனே. ஆயிரம்யானை பலம் கொண்ட பீமன் தனது பெரு உருவத்தையும் வலுவையும் கொண்டு, வெல்ல முடியாத பெரும் பல வீரர்களை பாரதத்தில் வென்று குவிப்பான். வாயுபுத்திரன் என்றாலும் அவனுக்கு இந்த பலம் எப்படி வந்தது …அதற்கும் ஒரு கதை உண்டு.
ஒரு நாள் பீமனும் திரெளபதியும் தனிமையில் இருக்கையில், காற்றிலே மிக இனிமையான மணம் வந்தது. அது ஏதோ மலரின் மணம். திரெளபதி அந்த மலரை விரும்பினாள்.அதைத் தேடிப் பீமன் சென்றான் – அடர்ந்த காட்டின் ஆழத்தில் மணம் அவனை எடுத்து சென்றது. அங்கே ஒரு குரங்கு வழியை அடைத்து அலட்சியமாக படுத்திருப்பதை கண்டு அதை விரட்ட குரல் கொடுத்தான் பீமன்
ஆனால் குரங்கோ இன்னும் அலட்சியமாக உன்னால் முடிந்தால் என் வாலை நகற்றி விட்டுச் செல்லேன் என்றது. அதன் அகம்பாவம் கண்டு எரிச்சல் அடைந்த பீமன் கீழே குனிந்து அதன் வாலை பிடித்து சுழற்றி எறிய முயன்றான் . ஆனால் என்ன விந்தை – அவனால் அசைக்கவே முடியவில்லை. பலம் அனைத்தையும் கொண்டு முயன்றும் அந்த வால் தரையை விட்டுச் சிறிதுகூட நகரவில்லை. அது சாதாரண குரங்கில்லை என்று அறிந்த பீமன் தன் ஆணவத்தை நினைத்து மனம் வருந்தி -அதனிடம் பணிவுடன் தாங்கள் யார் என்று வினவினான். அப்போது அந்த குரங்கு அனுமனாக உரு மாறி, வாயு புத்திரனாக – காட்சி அளித்து அணைத்துக்கொண்டான் பீமனை . அவருடைய தமயனை ( அப்போது பீமனுக்கு தன் உடலில் ஆயிரம் யானைகளின் பலம் புகுந்தது ) – எதிரிகளை சிதற அடிக்கும் வலிமையை தந்தது அந்த அணைப்பு, அதை விட பீமனது ஆணவத்தையும் அடக்கி அருள் புரிந்தான் அனுமன்.
சரி இப்போது சிற்பம். ஹலபேடு கோவில் சிற்பம். ( படத்தை நன்றாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள் )
நடுவில் இருப்பது பீமன் – எதிரில் வரும் யானையை எதிர்கொண்டு அதன் துதிக்கையை பிடித்து தன் கதையால் அடிக்கிறான். பின்னால் இரு எதிர் வீரர்கள் – கத்தி கேடயம் வைத்துக்கொண்டு நிற்கின்றனர். யானையையே அடித்து நொறுக்கும் பீமனை கண்டு நிற்கலாமா ஓடிவிடலாமா என்று யோசனை போல ?
26962693
சிற்பத்தின் மிக அருமையான பகுதி – அடுத்து பீமன் கொன்று குவித்தயானை மற்றும் யானை பாகர்களின் சடலங்களை – மலை போல குவிந்ததுஇருப்பதை காட்டி இருக்கும் வண்ணம் அருமை.
26982700