சிற்பக்கலைக்கு அழகூட்டும் ஓவியம் – திருபெருந்துறை ஆவுடையார் கோயில் குதிரை வீரன்

நாம் முன்னர், ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தின் அற்புதத் தூண்களில் உள்ள குதிரை வீரர் சிலைகளை பார்த்திருந்தோம், அதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு அற்புத குதிரை வீரன்.

பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் குதிரை, அதுவும் ஒவ்வொரு சதையிலும், நரம்பிலும் இருந்து எழும் வேகம், அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரன் அதனுடன் ஒன்றாய் கலந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அனுபவம் – பார்க்கும் கோழையின் ரத்தத்தைக் கூட மாற்றி அவனை வீரனாக்கும் ( இன்றைய இளைஞர்கள் இந்த உணர்வை மோட்டார் சைக்கிளில் பறக்கும் போது சற்று அனுபவிக்கலாம் ) – அந்த உணர்வு ஒரு சுதந்திரம். அதே போல எதிரில் இருக்கும் பெரும்படையை கண்டு அஞ்சாமல், வேல் ஏந்தி செல்லும் குதிரை படையை கண்டு அவர்களே அஞ்சி ஓடும் கதை பலவற்றை நாம் கேட்டுள்ளோம். பல வீடுகளில் வாண்டுகள் தூங்கும் முன்னர் கேட்கும் கதைகளில் குளம்பொலிகள் மிகுதியாக வரும். அதில் வரும் குதிரை வீரர்கள் – அது மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை போசிபல்ஸ் அல்லது பிரிதிவ் ராஜ் சௌஹனின் செடக் அல்லது நாம் தமிழ் வீரர்களான வாள் வில் ஓரியின் ஓரி, தேசிங்கு ராஜனின் பஞ்சகல்யாணி, இப்படி அந்த அற்புத குதிரைகளின் டக், டக், டக் எனும் குளம்பொலி சப்தம், பல மழலைகளை தூக்கத்திலும் அதன் பின்னர் கனவுகளிலும் ஆட்கொண்டன.

இன்று நாம், அதே போல ஒரு அற்புத குதிரை வீரனை பார்க்கப்போகிறோம். கல்லில். அதுவும் குதிரையைப் பற்றிய ஒரு அற்புதம் நடந்த மண்ணில். ( அதை மற்றொரு பதிவில் பார்ப்போம் ) – ஓவியர் திரு ஜீவா அவர்களின் உதவியுடன் இன்று ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறை செல்கிறோம்

ஒரு அற்புத ஓவியர் (www.jeevartistjeeva.blogspot.com) அவரது ஓவியத்தையும் சிற்பத்தின் படங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

இந்த கால அட்டவணையில் ( 14th C முதல் – நாயக்கர் காலம் / விஜயநகர மன்னர்கள் காலம்) இந்த மாதிரி அற்புத சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களைக் காணலாம். பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.

சரி, இந்த சிற்பத்தின் அழகை பார்ப்போம். குதிரை, குதிரை வீரன், அணிகலன், ஆபரணம் என்று இதனை நுணுக்கங்களை எப்படித்தான் கல்லில் செதுக்கினார்களோ.

குதிரை வீரனின் ஆயுதங்கள், அவன் கையில் பிடித்திருக்கும் ஈட்டி என்று ஒரு சின்ன குறிப்பை கூட விடாமல் ஒரே கல்லில் செதுக்கிய வேலைப்பாடு அருமை.

சிலை மட்டும் ஒரே கல்லில் வடிக்கவில்லை, இவை அனைத்துமே அந்த ஒரு தூணின் பாகம்.

இது மனித வெளிப்பாடா ??

படங்களுக்கு நன்றி திரு கந்தசுவாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *