வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே – அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??


அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *