தோடுடைய செவியன்

சிற்பக்கலையின் அழகு அதன் தோற்றத்திலும் அதனுள் இருக்கும் நுணுக்கங்களினாலுமே மேலும் மெருகு பெரும். திடீரென பார்ப்போருக்கு அதன் தோற்றம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் , எனினும் அது முழுமையான ரசனை அன்று.

மகரிஷி அரவிந்தர் அவர்கள் கலையழகைப் பற்றியும் ரசனையைப் பற்றியும் வெகு அழகாக சொல்லி இருக்கிறார்.

அழகான பண்பாட்டுச் சின்னமாக காணப்படும் கலையழகு என்பது சாதாரணமானதன்று. ஏதோ சுற்றுலா பயணிகள் ஓஹோ என்று போற்றுவதற்காகவோ அல்லது கலையறிவில்லாதோர் தூற்றுவதற்காகவோ படைக்கப்பட்டதன்று. இந்த படைப்பின் கலை ஆழத்தைப் புரிந்து கொள்ள முயலவேண்டும் தனிமையில் அந்தக் கலையழகின் ரகசியத்தை நாம் உணாந்து ரசிக்கவேண்டும். அந்த அழகுடன் நம் மனதை ஒன்றிவிட்டு பார்க்கவேண்டும். மனது ஒன்றிய நிலையில், மனம் தியானத்தின் உச்சத்தில் அந்த அழகின் ரகசியம் புலப்படும்போதுதான் மனிதனின் இயற்கை நிலையும், உலகாயுதமாக மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலும் புரியும்

இதில் பிரச்னை என்னவென்றால் காளிதாசனை போன்று ஒரே நாளில் இந்த திறமை வந்துவிடாது. முறையே பயிலவேண்டும். நல்ல ஆசான் தேவை. இன்றோ அப்படிப்பட்ட ஆசான்கள் மிகவும் குறைவு. அப்படி இருக்கையில் அடுத்த படியாக நல்ல நூல்கள் நமக்கு கை கொடுக்கலாம். எனினும் சிற்ப ஆராய்ச்சி வல்லுனர்கள் நம்மை போன்று முதல் முறை சிற்பம் பற்றி படிப்போரை குறி வைத்து நூல்கள் எழுதுவதில்லை. பல புத்தகங்கள், குறைந்த பட்சம் கொஞ்சம் சிற்பக்கலை தெரிந்தவருக்கே சிறிது கடினமாகத்தான் உள்ளன குறிப்பாக அதில் வரும் சிற்பக்கலையை ஒட்டிய சொற்கள் அத்தனை எளியவை அல்ல. நாம் இருக்கும் சாதாரண நிலையில் இந்த புத்தகங்களை எடுத்து படிக்கும் அளவிற்கு எப்படி செல்வது?

இதற்கு ஒரு சில நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் திரு கோபிநாத் ராவ் எழுதிய எலிமென்ட்ஸ் ஆஃப் ஹிந்து ஐகானோகிராபி, என்ற அருமையான புத்தகம் உதவுகிறது. பலதரப்பட்ட சிற்பங்களை விவரித்து உடன் ( நமக்கு மிகவும் உதவியாக ) கோட்டோவியங்களை கொண்டு விளக்குகிறார். உதாரணத்திற்கு காதணிகளை எடுத்துக்கொள்வோம். ‘மகர’ குண்டலம் ‘பத்ர’ குண்டலம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. எந்த சிற்பக்கலை பற்றிய புத்தகத்தை எடுத்தாலும் முதலில் வருவது இந்த குண்டலங்கள் தான். இவை என்ன?

தில்லி அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த அற்புத நடராஜர் வடிவத்தை பார்ப்போம்.

கூத்தபிரானின் ஆனந்த தாண்டவம் பற்றி தொடர்ந்து எழுதினால் இந்த இழை முடியாது. அதனால் அவனது தோடுகளை மற்றும் பார்ப்போம். தோடுடைய செவியன் ஆயிற்றே அவன்.

இரு காதுகளிலும் வெவ்வேறு அணிகளின் அணிந்திருப்பதை நீங்கள் இப்போது பார்க்கலாம்.

அவனது இடது காதில் வட்டமாக இருப்பது பத்ர குண்டலம். பனை ஓலை குண்டலம் – அந்த காலத்தில் அவ்வளவு தான் – ஒரு பனை மரத்து ஓலை ( இலை) இருந்தால் போதும் ( தங்கம் விலை என்னவோ ?)

வலது காதில் இருப்பது கொஞ்சம் கடினமான வடிவுடைய குண்டலம். மகர குண்டலம். நாம் முன்னரே இந்த மகரத்தை பார்த்தோம், எனினும் இன்று ஜாவா தீவில் ஒரு அற்புத மகர வடிவம் மீண்டும் பாருங்கள்..


( மகரம் – யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் கால்கள், மேலும் பன்றி, மீன், குரங்கு என்று பல மிருகங்களை உட்கொண்ட ஒரு புராண மிருகம். அழகிய வேலைப்பாடுடைய வால் இதற்கு)

இதை அவன் ஏன் தனது காதில் அணிந்தான் ( அதை பற்றி மேலும் தேட வேண்டும் – அப்படி பார்த்தல் இன்னும் வினோதமான காதணிகளும் உண்டு. அவற்றை பின்னர் பார்ப்போம் ) இப்போது மகர குண்டலம் இதோ .

அப்பாடா – இரு சின்ன காதணிக்கே இப்படிக் கண்ணை கட்டுதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *