காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *